ஆட்சேபக்காரர்கள் போலீசாரைத் தாண்டிச் சென்று கெபெங்கில் குந்தியிருப்பு மறியலை நடத்தினர்

ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆட்சேபக்காரர்கள் போலீஸ் சாலைத் தடுப்புக்களத் தாண்டிச் சென்று கெபெங் தொழில் பேட்டைக்கு அருகில் ஒன்று திரண்டு லினாஸ் அரிய மண் தொழில் கூடத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் அருகில் உள்ள பாலோக் கடற்கரையில் கூடியுள்ள ஆட்சேபக்காரர்களின் வரவை எதிர்பார்த்து போலீசார் இன்று காலையிலிருந்து அந்தத் தொழில் பேட்டைக்குச் செல்லும் சாலைகளில் மூன்று இடங்களில் தடுப்புக்களை போட்டிருந்தனர்.

அதற்கு முன்னதாக சாலைத் தடுப்பு ஒன்றில் பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு, பாஸ் சுற்றுச்சூழல் பிரிவுத் தலைவர் சுல்கெப்லி முகமட் ஒமார் ஆகியோர் தலைமையில் இயங்கிய குழு ஒன்றுக்கு திரும்பிப் போகுமாறு கூறப்பட்டது.

அதனால் மனம் கலங்காத அந்தக் குழு சாலைத் தடுப்பை கடந்து செல்வதற்கு வழியைக் கண்டு பிடித்தது. பின்னர் அதன் வழியாகச் சென்ற குழு கெபெங் வர்த்தக மய்யத்தைச் சென்றடைந்தது. அங்கு அவர்கள் முற்பகல் 11 மணி அளவில் குந்தியிருப்பு மறியலைத் தொடங்கினர்.

பின்னர் லோரி ஒன்றின் பின்புறத்தில் அமைக்கப்பட்ட மேடை ஒன்றிலிருந்து பலர் கூட்டத்தினருக்கு உரையாற்றினர்.