தனியார் நிறுவனங்கள் டாக்சி அனுமதிகளில் அனுபவித்து வரும் ஏகபோக உரிமையை ரத்துச் செய்யப் போவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாக்குறுதி அளித்துள்ளார்.
அதற்குப் பதில் டாக்சி ஒட்டுநர்களுக்கு நேரடியாக அனுமதிகளை வழங்க அரசாங்கம் எண்ணியுள்ளதாக அவர் சொன்னார்.
டாக்சி தொழிலுக்கான புதிய வடிவமைப்பின் ஒரு பகுதியாக “மிக நீண்ட காலம் பிடிக்காத திட்டத்தின்” கீழ் அது அமலாக்கப்படும்.
“நிறுவனங்களுக்கு மிக அதிகமான அனுமதிகள் கொடுக்கப்படுதைக் காண நான் விரும்பவில்லை. தனியார் நிறுவனங்களுக்கு அவற்றை வழங்கும் காலம் முடிவுக்கு வரும். புதிய வடிவமைப்பின் கீழ் நாங்கள் டாக்சி ஒட்டுநர்களுடைய நலன்கள் பாதுகாக்கப்படும் வகையில் தனிநபர்களுக்கு அந்த அனுமதிகளை கொடுப்போம்.”
“நடப்பு லீஸ் என்ற குத்தகை முறையை நான் விரும்பவில்லை. இது நவீன அடிமை முறையாகும்,” என நஜிப் இன்று காலை புக்கிட் ஜலிலில் ஒரே மலேசியா மக்கள் டாக்சி கூட்டத்தில் பேசிய போது பிரகடனம் செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட டாக்சி ஒட்டுநர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
அதனைச் செய்வதற்கு ஒரிரு ஆண்டுகள் பிடிக்கும் எனக் குறிப்பிட்ட பிரதமர் அரசாங்கம் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடல் நடத்த வேண்டியுள்ளது என்றார்.