இசா-வின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானியர் மீது கவனம்

மலேசியாவில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்று பாகிஸ்தானிய பிரஜைகளுக்கு உதவி செய்யுமாறு பாகிஸ்தான் அரசாங்கத்தை அந்த நாட்டின் மனித உரிமை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

“பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளருடன் தொடர்பு கொண்டுள்ள பாகிஸ்தான் மனித உரிமை ஆணையம், அந்த விவாகரம் மீது வெளியுறவு அலுவலகம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருப்ப்பதாகக் கூறியது.”

“அந்தப் பாகிஸ்தானியக் கைதிகளுடன் தொடர்பு கொள்ளுமாறு கோலாலம்பூரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்குப் பணிக்கப்பட வேண்டும். அவர்களுடைய சட்டப்பூர்வ உரிமைகள் மறுக்கப்படாமல் இருப்பதை அந்தத் தூதரகம் உறுதி செய்ய வேண்டும்,” என கடந்த புதன் கிழமை வெளியிட்ட அறிக்கையில் பாகிஸ்தான் மனித உரிமை ஆணையம் தெரிவித்தது.

மலேசிய மனித உரிமை (சுஹாக்காம்) ஆணையர் ஜேம்ஸ் நாயகம் தனக்கு வழங்கிய தகவல் அடிப்படையில் அந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பாகிஸ்தான் அமைப்பு கூறியது.

“மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புத் தடுப்பு மய்யத்தில் திரு. நாயகம் மூன்று பாகிஸ்தானியர்களைப் பார்த்துள்ளார். ஆவணங்களைப் போலியாகத் தயாரித்ததாகவும் மனிதக் கடத்தலில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அந்த மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.”

“அது தேசிய மருட்டல் அல்ல என திரு நாயகம் கருதுகிறார். ஆகவே அந்தப் பாகிஸ்தானியர்கள் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தவறாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் எண்ணுகிறார்,” என பாகிஸ்தானிய மனித உரிமை ஆணையம் குறிப்பிட்டது.

கமுந்திங்கில் உள்ள இசா தடுப்பு முகாமில் கைதிகள் பல வகையான அவமானத்தைத் தருகின்ற சித்தரவதைகளுக்கு இலக்காவதாக அங்கிருந்து வெளியே கடத்திக் கொண்டு செல்லப்பட்ட குறிப்புக்கள் காட்டுவதாக கடந்த திங்கிட்கிழமை செய்தி வெளியிடப்பட்டது.

இசா சட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ள போதிலும் இன்னும் 45 பேர் அந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் ஜுன் 21ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.