EO அறுவருக்கு எதிரான குற்றச் சாட்டுக்களை கைவிடுங்கள், பிஎஸ்எம்

அனைத்து அவசர காலச் சட்டங்களும் அகற்றப்படவிருப்பதால்  அவசர காலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட ஆறு பிஎஸ்எம் தலைவர்கள் மற்றும் பெர்சே 2.0 பேரணி தொடர்பில் கைதான 24 கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் மீதான எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் அரசாங்கம் கைவிட வேண்டும் என பிஎஸ்எம் கூறுகிறது.

இவ்வாறு அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் எஸ் அருட்செல்வன் கேட்டுக் கொண்டார். எஞ்சியுள்ள மூன்று அவசர காலச் சட்டங்களும் அகற்றப்படவிருப்பது, அவசர காலச் சட்டம் ரத்துச் செய்யப்படுகிறது எனப் பொருள்படும். அதனால் அந்தக் குற்றச்சாட்டுக்களை கைவிடுவதே ” நியாயமானது” என அவர் சொன்னார்.

அந்த 30 பிஎஸ் எம் உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை கைவிடுமாறு கேட்டுக் கொள்ளும் கடிதம் ஒன்றை பிஎஸ் எம் வழக்குரைஞர்கள் கடந்த வாரம் சட்டத்துறைத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த 30 பேரும் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்படும் வரையில் தாங்கள் ஒயப் போவதில்லை என்றும் அருட்செல்வன் குறிப்பிட்டார்.

“அந்தக் கடிதத்திற்குப் பதில் கிடைக்காவிட்டால் பிஎஸ்எம்-மும் சமூக அமைப்புக்களும் குற்றச்சாட்டுக்களை கைவிடுமாறு சட்டத்துறைத் தலைவரைக் கேட்டுக் கொள்ளும் கடிதத்தை அனுப்பும்.”

கீழறுப்பு நோக்கம் கொண்ட ஆவணங்களை வைத்திருந்ததாக ஆறு பிஎஸ் எம் தலைவர்கள் மீது -சங்கச் சட்டம், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி குற்றம் சாட்டப்பட்டது.

இதனிடையே நஜிப் அறிவித்த சீர்திருத்தங்களை பிஎஸ் எம் வரவேற்பதாகக் குறிப்பிட்ட அருட்செல்வன். அவை “உறுதியான காலக் கெடுவுடன் உடனடியாக” செய்யப்பட வேண்டும் என்றார்.