கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்திற்கு வெளியில் இன்று கூடிய மலாய் உரிமை நெருக்குதல் அமைப்பான பெர்க்காசா, அதன் மூன்று அரசதந்திரிகள் மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் எனக் கோரியது.
அந்த மூவரும் ஏப்ரல் 28ம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்ற பெர்சே 3.0 பேரணியில் அவர்கள் பங்கு கொண்டதை பெர்க்காசா ஆட்சேபிப்பதாக அதன் தலைவர் இப்ராஹிம் அலி கூறினார்.
தூய்மையான நியாயமான தேர்தல்களுக்கு போராடும் பொருட்டு நடத்தப்பட்ட அந்தப் பேரணியில் அவர்கள் காணப்பட்டது ” மலேசிய விவகாரங்களில் சிங்கப்பூர் தலையிட விரும்புகிறது என்ற எண்ணத்தைத் தருகிறது,” என்றார் அவர்.
அந்தத் தூரகத்திடம் மகஜர் ஒன்றைச் சமர்பித்த இப்ராஹிம், அந்த மூவருடைய நடவடிக்கைகளுக்காக சிங்கப்பூர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அந்த பாசிர் மாஸ் எம்பி வலியுறுத்தினார்.
அந்த நடவடிக்கைகள் இருவழி உறவுகளை பாதித்துள்ளதாகவும் அவர் சொல்லிக் கொண்டார்.
பிற்பகல் ஒரு மணி வாக்கில் நிகழ்ந்த ஆட்சேபக் கூட்டத்தில் பெர்காசாவின் நான்கு மூத்த உயர் அதிகாரிகளும் பங்கு கொண்டனர்.
ஜாலான் துன் ரசாக்கில் உள்ள சிங்கப்பூர் தூதரகக் கட்டிடத்துக்கு வெளீயில் கூடிய 300க்கும் மேற்பட்ட பெர்க்காசா ஆதரவாளர்கள் “மலாய்க்காரர்கள் நீடூழி வாழ்க”, “சிங்கப்பூரே தொலைந்து போ”, “மலேசியாவில் அமைதி தழைக்கட்டும்” என்னும் அர்த்தத்தைக் கொண்ட சுலோகங்களை 20 நிமிடங்களுக்கு முழங்கினர். பின்னர் தூதரக அதிகாரி ஒருவர் வெளியில் வந்து மகஜரைப் பெற்றுக் கொண்டார்.
பெர்சே 3.0ல் மூன்று சிங்கப்பூர் அரசதந்திரிகளின் ஈடுபாடு குறித்து கடந்த வெள்ளிக்கிழமை விஸ்மா புத்ரா சிங்கப்பூர் தூதர் ஒங் கெங் யோங்-கிடம் பேசியது.
அந்த மூவரும் ‘பாகுபாடு இல்லாத பார்வையாளர்களாக’ அங்கு இருந்தனர் என சிங்கப்பூர் தூதர் பின்னர் விளக்கினார்.
அந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்திய அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர் ஒருவர், அடுத்த பொதுத் தேர்தலில் சிங்கப்பூர் தலையிட முயலுவதாகக் குற்றம் சாட்டினார். அந்த மூவருக்கு இஸ்ரேலிய வேவுத் துறை பயிற்சி அளித்துள்ளது என்று கூட அவர் கூறிக் கொண்டார்.