கிட் சியாங்: ‘பெண்டாத்தாங்’ என்ற அவதூறு, ஒரே மலேசியா தோல்வி கண்டு விட்டதைக் காட்டுகிறது

பெண்டாத்தாங் (குடியேறி) என்னும் அவதூறுச் சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுவதற்கு மூல காரணம் எனக் கருதப்படும் அரசாங்க ஆதரவு பெற்ற இனவாத போதனைகளை நிறுத்துவதற்கு நஜிப் நிர்வாகம் தவறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்று குறிப்பிட்டுள்ளது போல அந்தச் சொல் பயன்படுத்தப்பட்ட சம்பவங்கள் ஆங்காங்கே மட்டும் நிகழ்ந்தவை அல்ல என டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங் விடுத்த அறிக்கை கூறியது.

“அந்த பெண்டாத்தாங் (குடியேறி) என்ற அவதூறுச் சொல்லுக்கு ‘ஒரிரு கிறுக்கர்கள்’ மட்டும் காரணமல்ல. பிடிஎன் போன்ற அரசாங்க அமைப்புக்கள் பல தசாப்தங்களாக நடத்தி வரும் தேசிய எதிர்ப்புப் போதனைகள் என்னும் விஷத்தால் விளைந்ததே அந்தச் சொல்,” என லிம் சொன்னார். “அத்துடன் மலேசியர்களும் இரண்டு வகையான மக்களாகப் பிரிக்கப்பட்டனர்.”

நஜிப் நிர்வாகம் அத்தகைய ‘கிறுக்கர்களை’ ஒடுக்குவதற்கு குறிப்பாக தனது ஒரே மலேசியா கொள்கை வழி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை விளக்க வேண்டும் என்றும் லிம் வலியுறுத்தினார்.

“அத்தகைய சொல் ‘பிளவுபடுத்துகிறது, ஏமாற்றுகிறது, தேசிய எதிர்ப்புத் தன்மை கொண்டது’ என  வகைப்படுத்தப்பட்டு நியாய சிந்தனை கொண்ட அனைத்து மலேசியர்களாலும் கண்டிக்கப்பட வேண்டும்.”

சீன இளைஞர்களுடன் நேற்று மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நஜிப் அளித்த பதில்கள் பற்றி லிம் கருத்துரைத்தார்.

சீன சமூகத்தினரை ‘pendatang’ (குடியேறிகள்) என சிலர் அழைத்ததால் மனம் புண்பட வேண்டாம் என்றும் அவற்றை ஒரிரு கிறுக்கர்களே கூறியுள்ளனர் என்றும் அந்த சமூகத்தை  நஜிப் அப்போது  கேட்டுக் கொண்டார்.  அவர்களைப் புறக்கணிக்குமாறும் நஜிப் கேட்டுக் கொண்டார்.

பிடிஎன் என்னும் தேசிய குடியியல் பிரிவு பல தசாப்தங்களாக ஊட்டிய போதனைகள் காரணமாக அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் ‘கிறுக்கர்கள்’ என அழைக்கப்படுகின்றவர்கள் பரவலாகக் காணப்படுகின்றனர் என்றும் லிம் சொன்னார்.

எடுத்துக்காட்டுக்கு ஒரே மலேசியா நிகழ்வு ஒன்றில் இன அவதூறுச் சொற்களை கூறியதற்காக நஜிப்பின் சிறப்பு உதவியாளர் நாசிர் ஜபார் கட்டாயப்படுத்தப்பட்டு பதவி துறந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.

2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிகழ்ந்த கருத்தரங்கு ஒன்றில் நாசிர், இந்தியக் குடியேறிகள் பிச்சைக்காரர்கள் என்றும் சீனர்கள் விலைமாதர்கள் என்றும் குறிப்பிட்ட பின்னர் அங்கு இருந்த மசீச, மஇகா உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தார்கள்.

பிடிஎன் பிரதமர் துறையில் இயங்கும் ஒரு பிரிவாகும். அதற்கு கூட்டரசு வரவு செலவுத் திட்டத்தில் நாடாளுமன்றத்தைக் காட்டிலும் கூடுதலான ஒதுக்கீடு வழங்கப்படுகின்ரது.

‘விசுவாச சொற்பொழிவுகள்’ என்னும் போர்வையில் இனவாத பிரச்சாரப் பிரிவாக அது இயங்குகிறது என அதன் மீது அடிக்கடி குற்றம் சாட்டப்பட்டுகின்றது. அது நடத்தும் பயிற்சிகளில் அரசாங்க உபகாரச் சம்பளங்களைப் பெறுகின்றவர்களும் பதவி உயர்வு நாடும் அரசாங்க ஊழியர்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

 

TAGS: