தமது உறவினருடைய சட்ட நிறுவனத்துக்கு ‘ஆதரவுக் கடிதத்தை’ வழங்கியதாகக் கூறப்படுவதை பாக்கா மறுக்கிறார்

தமது உறவினருடைய சட்ட நிறுவனத்தை தனது சட்ட ஆலோசனைக் குழுவில் சேர்த்துக் கொள்வது பற்றிப் பரிசீலிக்குமாறு மாநில அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றுக்குத் தாம் எழுதிய கடிதம் ஆதரவுக் கடிதம் எனக் கூறப்படுவதை சிலாங்கூர் மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் பாக்கா ஹுசின் மறுத்துள்ளார்.

“நான் எழுதிய அந்தக் கடிதம் ஆதரவுக் கடிதம் அல்ல. நான் விசாரிக்கப்படுவதற்குத் தயாராக இருக்கிறேன். இது வரை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அந்த விவகாரம் மீது உறுதிப்படுத்துவதற்கு இது வரை என்னை அழைக்கவில்லை,” என அவர் சொன்னார்.  அவரது தகவலை இன்று சினார் ஹரியான் வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு சொந்தமான Permodalan Negeri Selangor Bhdல் தாம் வாரிய உறுப்பினர் அல்ல என்றும் அந்த நிறுவனத்துக்காக முடிவு செய்யும் அதிகாரம் ஏதும் தமக்கு இல்லை என்றும் பாக்கா அந்த மலாய் நாளேட்டிடம் கூறினார்.

அந்த விவகாரம் மீது தமக்கு அவதூறாக எழுதும் வலைப்பதிவாளர் மீது தாம் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என்றும் அவர் சொன்னார்.

சிலாங்கூர் மந்திரி புசார் அலுவலகத்தின் கடிதத் தாளில் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில் பின்வரும் வாசகம் எழுதப்பட்டுள்ளது; “நிறுவன விதிமுறைகள் ஏதும் மீறப்படாத வரையில் அந்தச் சட்ட நிறுவனத்துக்கு  வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும் என நிர்வாகம் கருதுகிறது.”

எம்ஏசிசி அந்தக் கடிதத்தையும் பாக்காவின் பங்கையும் ஆய்வு செய்வதாக அதன் துணை ஆணையர் (நடவடிக்கை) முகமட் சுக்ரி அப்துல் ஏற்கனவே கூறியிருக்கிறார். ஆனால் அதிகாரத்துவப் புலனாய்வு தொடங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

அதற்கு முன்னதாக விசாரணை நடைபெற்று முடியும் வரையில் பாக்கா-வை இடைநீக்கம் செய்யுமாறு சிலாங்கூர் பிகேஆர்  தகவல் பிரிவுத் தலைவரும் ஸ்ரீ மூடா சட்டமன்ற உறுப்பினருமான சுஹாய்மி ஷாபியி , மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிமைக் கேட்டுக் கொண்டார்.

ஆனால் அந்தக் கடிதம் வழக்கமான ஒன்று எனவும் நெறிமுறைகளுக்கு முரணானது அல்ல என்றும் பாக்காவை காலித் தற்காத்துப் பேசியிருக்கிறார்.