டிஏபி: கதிரியக்கக் கழிவுகளை ஏற்றுமதி செய்ய முடியாது

குவாந்தானில் அமைந்துள்ள லினாஸ் அரிய மண் தொழில் கூடத்தின் கழிவுகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற மசீச நிலை, அபாயகரமான பொருட்களை எல்லைகளைக் கடந்து கொண்டு செல்லப்படுவதற்கான பேசல் மாநாட்டு ஒப்பந்தத்திற்கு முரணானது என டிஏபி எச்சத்துள்ளது.

மசீச யோசனை “மூன்றாம் தர பயங்கர திரைப்படத்தின்” சதித் திட்டம் போன்று உள்ளதாக டிஏபி செயலாளர் தெரெசா கோக் கூறினார்.

“1993ம் ஆண்டு மலேசியா கையெழுத்திட்டுள்ள பேசல் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பற்றி அமைச்சரவைக்குத் தெரியுமா ?” என வினவினார்.

லினாஸ் அரிய மண் தொழில் கூடத்தின் கழிவுகள் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற மசீச-வின் நிலையை அதன் துணைத் தலைவரும் சுகாதார அமைச்சருமான லியாவ் தியோங் லாய் கடந்த ஞாயிற்றுக் கிழமை குவாந்தானில் அறிவித்தது பற்றி கோக் கருத்துரைத்தார்.

சுத்திகரிக்கப்படாத அரிய மண்ணை வழங்கும் ஆஸ்திரேலியா ஏன் கெபெங்கில் உள்ள தொழில்  கூடத்திலிருந்து கழிவுகளை ஏன் ஏற்றுக் கொள்ளாது என்பதற்கு லினாஸ் விளக்கம் தர வேண்டும் என்றும் லியாவ் கேட்டு கொண்டார்.

“அந்த கதிரியக்கக் கழிவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு எந்த நாடு அனுமதிக்கும் என்பதற்கு எந்த உள்நாட்டு அனைத்துலக கடப்பாடும் இல்லை. அந்த சூழலில் அபாயகரமான கழிவுகளை ஏற்றுமதி செய்ததாக மலேசியா மீது குற்றம் சாட்டப்படும்,” என கோக் ஒர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பேசல் ஒப்பந்தம், ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு அபாயகரமான கழிவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கிறது அல்லது ஊக்கமளிக்கவில்லை,” என அவர் சொன்னார்.

“பேசல் ஒப்பந்தத்தை அமைச்சரவை கவனிக்கவில்லையா அல்லது பேசல் ஒப்பந்தம் என்றால் என்ன என்பது பற்றி அரசாங்கத்திற்கு ஏதும் தெரியவில்லையா,” என தொழில் துறைக்கு பொறுப்பான சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினருமான கோக் வினவினார்.

பொது மக்களுடைய மனக் குறைகளைத் தீவிரமாகப் பரிசீலிக்குமாறும் அவர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார். அந்த அரிய மண் தொழில் கூடம் ‘பாதுகாப்பானது’ என்பதை ‘மெய்பிக்க’ கெபெங் மக்கள் ‘சோதனை விலங்குகளாக’ மாற்றப்பட்டுள்ளதாக  கோக் வருத்தத்துடன் கூறினார்.

“லினாஸ் தொழில் கூடம் எந்தத் தீங்கையும் ஏற்படுத்தாது என்பதை நிரூபிப்பதற்கு தாங்கள் ஒரு நிமிடத்துக்குக் கூட பயன்படுத்தப்படக் கூடாது என கெபெங் மக்கள் உரத்த குரலில் தெளிவாக கூறியுள்ளனர்.”