ஜாஹிட்:என் மனைவி முன்னாள் இராணுவத்தினருக்கு அறிவுரைதான் சொன்னார்

தற்காப்பு அமைச்சர் ஜாஹிட் ஹமிடி, தம் துணைவியார் ஹமிடா காமிஸ், தற்காப்பு   அமைச்சுக்கு(மிண்டெப்) வெளியில் ஆர்ப்பாட்டம் செய்யத் திட்டமிட்டிருந்த முன்னாள் இராணுவத்தினரைக் குறுஞ் செய்திவழி மிரட்டினார் என்று கூறப்படுவதை மறுத்தார்.

ஆர்ப்பாட்டம் செய்ய எண்ணியிருந்தவர்களுக்கு அவர் அறிவுரைதான் கூறினார் என்றாரவர்.

முன்னாள் மலாய் ஆயுதப்படை வீரர்கள் சங்க(பிவிடிஎம்)த் தலைவர் முகம்மட் அலி பஹ்ரோம்(இடம்), சங்கம் ஜூன் 29 ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டதற்கு அந்த மிரட்டலும் அன்றைய தினம் ஜாஹிட் அமைச்சில் இருக்க மாட்டார் என்பதும்தான் காரணம் என்று கூறியிருந்தது பற்றிக் கருத்துரைத்தபோது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

“என் மனைவியும் அலியும் ஒரே கம்பத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் உறவினர் அல்லர் என்றாலும் ஒருவர் மற்றவரை நன்கு அறிவார்கள்.

“யாராக இருந்தாலும் குறுஞ் செய்திகளை அனுப்பி வைப்பார் அலி.அதில் அவருக்கு அவ்வளவு விருப்பம். அலி இதுவரை 16 குறுஞ்செய்திகளை என் மனைவிக்கு அனுப்பியுள்ளார்.

“அதனால்தான் என் மனைவி அவருக்கு அறிவுரை கூறியுள்ளார்.நானும் அதைப் படித்துப் பார்த்தேன்.அதை ஒரு மிரட்டலாக நான் கருதவில்லை”, என்றார் ஜாஹிட்.

இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அதைப் பற்றி மேலும் விவரித்த ஜாஹிட்(இடம்), அலி “மிரட்டல்கள் விட்டே பழகிவிட்டவர்” அதனால்தான் ஒரு சிறிய செய்திகூட அவருக்கு மிரட்டலாகத் தெரிகிறது என்று சாடினார்.

“அலி, முன்னாள் படைவீரர்கள் சங்கம் ஒன்றின் தலைவர்.அவரை என் மனைவி மிரட்ட வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

“ஆர்ப்பாட்டம் செய்வதாக இருந்தால் அது அவரது உரிமை….ஆனால், முன்னாள் வீரர்களுக்குச் சேவை செய்வதை நேர்மையாக செய்ய வேண்டும்”, என்றாரவர்.

ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்ட நாளில் தாம் வெளிநாட்டில் இருந்ததாகவும் அதனால் முன்னாள் படைவீரர்களைச் சந்திக்க முடியாமல் போனது என்றும் அலி கூறுவது பொய் என்றும் ஜாஹிட் கூறினார்.

“முன்னாள் படைவீரர் விவகாரத் துறையிலிருந்து எவ்வளவு உதவியைப் பெற்றிருக்கிறார், எத்தனை பேரிடம் பணம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார், எத்தனை பேரை உதவிசெய்யவில்லை என்பதற்காக மிரட்டினார் என்பதையெல்லாம் அவர் நினைத்துப் பார்க்க வேண்டும்”.

‘ஓய்வூதியமில்லா முன்னாள் படைவீரர்களுக்கு உதவி’

முன்னாள் படைவீரர்களின் நலன் கவனிக்கப்படுவதில்லை என்பதை வலியுறுத்தவே ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தது,பின்னர் அது கைவிடப்பட்டது. 

இராணுவத்தில் சேர்வோர் குறைந்தது 21 ஆண்டுகளைப் பூர்த்தி செய்யாமல் பணி ஓய்வுபெற விரும்பினால் அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது என்று ஜாஹிட் கூறினார்.

“ஆனால், முன்னாள் படைவீரர் விவகாரத்துறை பணி ஓய்வுபெறும் படைவீரர்களுக்கு நீண்டகால உதவிகளைச் செய்கிறது.

“அவர்களின் பிள்ளைகள் பல்கலைக்கழகத்தில் படித்தால் ரிம1,500 வழங்குகிறது.பட்டய படிப்புப் படிப்போருக்கு ரிம1,000. பள்ளிசெல்லும் பிள்ளைகளுக்கும் உதவுகிறது”, என்றார்.

இவை தவிர, நோயுற்றோருக்கு மருத்துவச் செலவு, வீடுகளைப் பழுதுபார்க்க நிதியுதவி முதலியவையும் வழங்கப்படுகின்றன.

“கடந்த மூன்றாண்டுகளில் ஓய்வூதியம் பெறாத 79,000 முன்னாள் படைவீரர்களுக்காக ரிம82மில்லியன் செலவிட்டிருக்கிறோம்.அதாவது ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு ரிம1,000.அவர்களின் ஆயுள் முழுக்க இந்த உதவி தொடரும்”, என்று ஜாஹிட் கூறினார்.