அரசாங்கம் இஸ்லாத்தின் புனிதத்தன்மையை பாதுகாக்கும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உறுதி அளித்துள்ளார்.
திருநங்கை நடவடிக்கைகள்( LGBT )போன்ற முரண்பாடான பண்பாடுகளுக்கு மலேசியாவில் இடமில்லை என்றும் அவர் சொன்னார்.
சில தரப்புக்கள் வலியுறுத்தி வருகின்ற பல்வகைத்தன்மை, தாராளத் தன்மை ஆகிய எதிர்மறையான சிந்தனைகளையும் தாம் எதிர்த்துப் போராடப் போவதாக நஜிப் குறிப்பிட்டார் என உத்துசான் மலேசியா இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று உலாமா செயலகத்தை தொடக்கி வைத்து ‘Agenda Islam dalam Transformasi Negara’ (தேசிய உருமாற்றத்தில் இஸ்லாமியச் சிந்தனைகள்) என்ற தமது புத்தகத்தை வெளியிட்ட பின்னர் நஜிப் ஆற்றிய உரையை அந்த ஏடு பிரசுரித்திருந்தது.
மலேசியாவை நவீனமான உயர்ந்த வருமானத்தைக் கொண்ட நாடாக உருமாற்றும் அரசாங்க முயற்சிகளின் போது சமயம், தார்மீகப் பண்புகள் மீது சமரசம் செய்து கொள்ளப்பட மாட்டாது என்றும் நஜிப் சொன்னார்.
ஹஜ் யாத்திரைக் காலத்தில் தேர்தல் இல்லை
மலேசியாவில் LGBT என்னும் திருநங்கை நடவடிக்கைகளுக்கும் பல்வகைத்தன்மை, தாராளத் தன்மை போன்ற எதிர்மறையான சிந்தனைகளுக்கும் இந்த நாட்டில் இடம் கிடைக்காமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்,” என்றும் அவர் சொன்னதாக அந்த ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
ஹஜ் யாத்திரைக் காலத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என கோடி காட்டிய பிரதமர் யாத்திரைக் காலத்தில் பொதுத் தேர்தல் நடக்குமானால் தங்களது ஹஜ் பயணங்களை தள்ளி வைக்குமாறு தனது உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்ட பாஸ் கட்சியை சாடினார்.
“அவர்கள் இஸ்லாத்துக்கு மேலாக கட்சி நலனைக் கருதுகின்றனர். இஸ்லாமியக் கோட்பாட்டின் கீழ் ஹஜ் கடமைக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். வாக்குகளைச் செலுத்துவதற்கு அல்ல,” என்றார் அவர்.
“ஆனால் தயவு செய்து என்னை நம்புங்கள். பொதுத் தேர்தலை அறிவிப்பதற்கு முன்னர் அரசாங்கம் எல்லா அம்சங்களையும் கருத்தில் கொள்ளும். அந்தப் பரிசீலினை இஸ்லாமியத் தேவைகளுக்கு ஏற்ப இருப்பதையும் நான் உறுதி செய்வேன்,” என்றும் நஜிப் சொன்னார்.