டிஏபி எம்பிகள், தேசிய சேவைக்குச் சென்று பயிற்சியின்போது நோயுற்று ஓராண்டு கழித்து இறந்துபோன ஏ.தமிழரசி இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று தற்காப்பு அமைச்சைக் கேட்டுக்கொண்டனர்.
இறந்துபோனவரின் குடும்பத்துக்குத் தேசிய சேவை காப்புறுதித் திட்டத்திலிருந்து இழப்பீடு கொடுக்கப்படவில்லை.
தமிழரசி பயிற்சியின்போது நோயுற்றாலும் பயிற்சிமுடிந்து ஓராண்டுக்குப் பிறகுதான் இறந்தார் என்பதால் அவரது குடும்பம் காப்புறுதிப் பணம் பெற தகுதிபெறாது என்று கூறுவது முறையல்ல என்று கூறிய தெலுக் இந்தான் எம்பி எம்.மனோகரன்(இடம்),ஓராண்டுக்குப் பின்னர்தான் அவர் இறந்தார் என்றாலும் பயிற்சியின் காரணாகத்தான் அவர் இறந்தார் என்றார்.
“அக்குடும்பத்தின் ஒரே மகளான அவர் பயிற்சி முகாமில் உடல்நலம் குன்றினார், பிறகு குணமடைந்தார், ஓராண்டு கழித்து இறந்தார் என்பதுபோலப் பேசுவது சரியல்ல.
“பயிற்சிக் காலத்தின்போது நோயுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு கோமா நிலைக்குச் சென்று ஓராண்டுக் கழித்து இறந்தார் என்பதுதான் உண்மை”.இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் மனோகரன் இவ்வாறு கூறினார்.
பயிற்சியில் உள்ளவர்கள் மட்டுமே அந்தக் காப்புறுதித் திட்டத்தின்கீழ் இழப்பீடு பெற தகுதிபெறுவார்கள் என்பதால் அது அக்குடும்பத்தினருக்குக் கிடைக்காது என்று தேசிய சேவை தலைமை இயக்குனர் அப்துல் ஹாடி ஆவாங் கிச்சில் அறிவித்திருந்தது பற்றி மனோகரன் கருத்துரைத்தார்.
அக் காப்புறுதித் திட்டம், பயிற்சியாளர்கள் முகாமில் காலடி எடுத்துவைப்பதற்கு 72மணி நேரத்துக்குமுன் தொடங்கி பயிற்சி முடிந்த 168 மணிநேரம்வரைதான் அவர்களுக்குக் காப்பீடு வழங்குகிறது என்று கோட்டா மலாக்கா எம்பி சிம் தொங் ஹிம் கூறினார்.
“எனவே, பயிற்சியாளர்கள் முகாமிலிருக்கும்போது நோயுற்று குறிப்பிட்ட நேரத்துக்குப் பின் இறந்துபோனால் இக்காப்புறுதித் திட்டத்தின்கீழ் அவர்கள் காப்பீடு பெற மாட்டார்கள்.இது அநியாயம்”, என்றார்.
பத்து காஜா எம்பி போங் போ குவான்(இடம்) 2004-இல் தேசிய சேவைத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுரை ரிம4.36பில்லியன் செலவிடப்பட்டிருப்பதாகவும் அதில் 19பேர் உயிர் இழந்தனர் என்றும் 23பேர் நிரந்தர உறுப்புச்செயலிழப்புக்கு ஆளானார்கள் என்றும் தெரிவித்தார்.
“தற்காப்பு அமைச்சர்(அஹமட் ஜாஹிட் ஹமிடி)இதில் கவனம் செலுத்தி தமிழரசியின் குடும்பத்துக்கு இழப்பீடு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.
காப்பீடு கொடுக்க மறுப்பது தேசிய சேவைமீது பெற்றோர் வைத்துள்ள நம்பிக்கையைக் கெடுத்துவிடலாம் என்றவர் எச்சரித்தார்.
அச் செய்தியாளர் கூட்டத்தில் சிரம்பான் எம்பி ஜான் பெர்னாண்டசும் இருந்தார்.
அவர்கள் இன்று காலை இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சர் அஹமட் ஜாஹிட்டிடம் முறையீட்டுக் கடிதம் ஒன்றையும் வழங்கினர்.