‘தேசியச் சேவைப் பயிற்சியாளருடைய மரணத்துக்கு இழப்பீடு கொடுங்கள்’

தேசிய சேவை முகாமில் நோய்வாய்ப்பட்டு அதற்கு ஒராண்டுக்கு பின்னர் மரணமடைந்த தேசிய சேவைப் பயிற்சியாளர் ஒருவருடைய குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குமாறு எனத் தற்காப்பு அமைச்சை டிஏபி பேராளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தேசிய சேவைக் குழுமக் காப்புறுதித் திட்டத்திலிருந்து பணம் கிடைக்காது என அந்தக் குடும்பத்தாருக்கு கூறப்பட்டுள்ளது.

ஏ தமிழரசி என்ற அந்த தேசியச் சேவைப் பயிற்சியாளருடைய மரணம் ஒராண்டுக்குப் பின்னர் ஏற்பட்டாலும் பயிற்சியின் விளைவாகவே அவர் காலமானார் என்பதால் அவரது குடும்பத்துக்கு காப்புறுதி தொகை கிடைக்காது எனக் கூறப்படுவதற்கான காரணம் செல்லுபடியாகாது என தெலுக் இந்தான் எம்பி எம் மனோகரன் கூறினார்.

“அந்தக் குடும்பத்தின் ஒரே பிள்ளையான தமிழரசி பயிற்சி முகாமில் நோய் வாய்ப்பட்டு குணமடைந்து விட்டார். ஒராண்டுக்குப் பின்னர் அவர் மரணமடைந்தார் என்ற எண்ணம் தவறானது.”

“உண்மையில் அவர் பயிற்சியின் போது நோய்வாய்ப்பட்டார், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், சுயநினைவை இழந்தார். ஒராண்டுக்குப் பின்னர் மரணமடைந்தார்,” என மனோகரன் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

குழும காப்புறுதித் திட்டம் பயிற்சியில் உள்ள பயிற்சியாளர்களை மட்டுமே உள்ளடக்கியிருப்பதால் தமிழரசி குடும்பம் அதனைப் பெறுவதற்குத் தகுதி பெறவில்லை என தேசிய சேவை தலைமை இயக்குநர் அப்துல் ஹாடி அவாங் கெச்சில் விடுத்துள்ள அறிக்கைக்கு மனோகரன் பதில் அளித்தார்.

அது குறித்து மேலும் விவரித்த கோத்தா மலாக்கா எம்பி சிம் தொங் ஹிம், பயிற்சியாளர்கள் முகாமுக்குள் நுழைவதற்கு 72 மணி நேரம் முன்பு தொடக்கம் முகாமிலிருந்து அவர்கள் வெளியேறிய 168 மணி நேரம் வரையில் தான் காப்புறுதித் திட்டம் பாதுகாப்பு வழங்குவதாகச் சொன்னார்.

“ஆகவே பயிற்சியாளர் ஒருவர் முகாமில் இருக்கும் போது நோயுற்று மேலே குறிப்பிடப்பட்ட நேரங்களுக்குப் பின்னர் மரணமடைந்தால் காப்புறுதிப் பாதுகாப்பு இல்லை. அது நியாயமற்றது,” என்றார் அவர்.

இதனிடையே 2004ம் ஆண்டு தேசியச் சேவைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது முதல் அதற்கு 4.36 பில்லியன் ரிங்கிட் செலவு செய்யப்பட்டுள்ள போதிலும் மொத்தம் 19 பயிற்சியாளர்கள் மரணமடைந்துள்ளனர். 23 பேருக்கு நிரந்தரமாக உடற்குறை ஏற்பட்டுள்ளது என பத்து காஜா எம்பி போங் போ குவான் சொன்னார்.

“தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி அந்த விஷயத்தை தீவிரமாக பரிசீலித்து தமிழரசி குடும்பத்துக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.”

காப்புறுதியை மறுப்பது, தேசியச் சேவைக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்களுடைய நம்பிக்கையை குலைக்கும் என்றும் அவர் சொன்னார்.

அந்த நிருபர்கள் சந்திப்பில் சிரம்பான் எம்பி ஜான் பெர்னாண்டெஸும் இருந்தார்.

அந்தக் குழுவினர் அகமட் ஸாஹிட்டிடம் அந்த விவகாரம் தொடர்பில் கடிதம் ஒன்றையும் சமர்பித்தார்கள்.