மேலும் ஏழு இசா கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்தனர்

தாங்கள் முன் கூட்டியே விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரி இரண்டு இசா (உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்) கைதிகள் தொடங்கியுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் மேலும் ஏழு இசா கைதிகளும் இணைந்து கொண்டுள்ளதாக இசா எதிர்ப்பு இயக்கம் (ஜிஎம்ஐ)  இன்று பிற்பகல் தெரிவித்துள்ளது.

அந்தப் போராட்டத்தில் புதிதாக சேர்ந்து கொண்டுள்ள  எழுவரில் இருவர் மலேசியர்கள், நால்வர் இலங்கையர்கள், ஒருவர் இந்தியப் பிரஜை என எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்களைச் சேர்த்து மொத்தம் 9 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்,” என ஜிஎம்ஐ செயலக உறுப்பினர் சுக்ரி ராஸாப் கூறினார்.

ஏற்கனவே பாட்சுல்லா அப்துல் ரசாக், ரசாலி ஹசான் ஆகிய இரண்டு இசா கைதிகளும் கடந்த வியாழக் கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்..

அவர்கள் இருவரும் கடந்த ஆறு நாட்களாக தண்ணீரை மட்டுமே அருந்தியிருப்பதால் பலவீனமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது,” என சுக்ரி விடுத்த ஒர் அறிக்கை கூறியது.