பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை ‘போலியான ஜனநாயகவாதி’ என வகைப்படுத்தி உலகின் சர்வாதிகாரிகளுடன் அவரையும் சேர்த்து முக்கிய கனடிய நாளேடு ஒன்றில் வெளி வந்துள்ள கட்டுரை குறித்து வெளியுறவு அமைச்சு மிகுந்த வருத்தமடைந்துள்ளது.
“21வது நூற்றாண்டு சர்வாதிகாரிகளுக்கான பட்டியல்” என்னும் தலைப்பில் ஜுன் மாதம் 8ம் தேதி The Globe and Mail என்ற ஏட்டில் வெளியாகியுள்ளது.
அந்தக் கட்டுரையை அதன் பெய்ஜிங் பிரிவுத் தலைவர் மார்க் மெக்கினோன் எழுதியுள்ளார். பல விருதுகளைப் பெற்றுள்ள அவர் சர்ச்சைக்குரிய, பிரபலமான பல தலைவர்களை பேட்டி கண்டுள்ளார்.
அந்தக் கட்டுரையில் சர்வாதிகாரிகளை நான்கு பிரிவுகளாக- போலியான ஜனநாயகவாதிகள் (false democrats), கிறுக்குப் பிடித்த தற்பெருமைக்காரர்கள் (mad egotists), செல்வாக்கு பெறுவதற்காக வன்முறையில் ஈடுபடுகின்றவர்கள்(violent populists), கொடூரமான முதலாளித்துவ வாதிகள்(callous capitalists) என மெக்கினோன் வகைப்படுத்தியுள்ளார். \
நஜிப் முதல் பிரிவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், பாலஸ்தீன அதிபர் மஹ்முட் அபாஸ், அல்ஜீரிய அதிபர் அப்துல் அஜிஸ் போட்பிலிகா, எதியோப்பியப் பிரதமர் மெலெஸ் ஜெனாவி, கம்போடியப் பிரதமர் ஹுன் சென் ஆகியோருடன் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் யூகோஸ்லாவிய அதிபர் ஸ்லோபோடான் மிலோசெவிச், முன்னாள் எகிப்திய அதிபர் ஹொஸ்னி முபாராக் ஆகியோர் அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த முன்னாள் உறுப்பினர்கள் ஆவர்.
அந்தத் தலைவர்கள் “தேர்தல்களை நடத்துகின்றனர். ஆனால் அதிகாரைத்தை கைவிடும் நோக்கம் இல்லை” என்றும் அவர்களுடைய “தீவிரமான அரசியல் எதிரிகள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். அவர்களுடைய கட்சிகள் சட்ட நுணுக்கங்கள் மூலம் சட்டவிரோதமாக்கப்படுகின்றன” என்றும் மெக்கினோன் எழுதியுள்ளார்.
‘போலியான ஜனநயகங்கள் பின்பற்றப்படுகின்றன’
அந்தத் தலைவர்கள் ஆளும் நாடுகளில் நம்பிக்கை வைப்பதற்குக் காரணம் இருப்பதாகவும் அவர் சொன்னார்.ஏனெனில் அவர்கள் பின்பற்றுகின்ற ‘போலியான ஜனநாயகங்கள்’ மாற்றத்துக்கான சாத்தியத்தை உருவாக்கியுள்ளன.
“போலி ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட இடத்தை குடிமக்கள் பயன்படுத்திக் கொண்டதால் திரு மிலோசெவிச்சும் திரு முபாராக்கும் வீழ்த்தப்பட்டனர். மலேசியாவில் அடுத்த தேர்தல் நிச்சயம் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கும்.”
ஆனால் அத்தகைய அரசாங்கங்களின் மறுபக்கத்தையும் மெக்கினோன் சுட்டிக் காட்டியுள்ளார்.
“அந்த போலி ஜனநாயகங்கள் உண்மை நிலையைக் காட்டிலும் அதிகமான சுதந்திரத்துடன் இருப்பதாக காட்டும் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அதனால் வழக்கமாக கொடுங்கோல் ஆட்சிகள் மீது தொடுக்கப்படும் அனைத்துலக நெருக்குதலுக்கு அந்த போலி ஜனநாயக ஆட்சிகள் இலக்காவது இல்லை.”
அந்தக் கட்டுரைக்கு பதில் அளிக்கும் வகையில் மலேசிய வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் அந்த நாளேட்டுக்கு அனுப்பிய கடிதம் இன்று அதில் வெளியிடப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சின் தகவல், பொது அரசதந்திரத் துறையின் துணைச் செயலாளர் அகமட் ரோஸியான் அப்துல் கனி எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நஜிப் தொடங்கியுள்ள சீர்திருத்தங்களின் பட்டியல் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தச் சீர்திருத்தங்கள் “எந்தத் தரத்திலும் மகத்தான சாதனைகள்” என்றும் அதில் வருணிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்துச் செய்தது, 60 ஆண்டு கால அவசர கால நிலையை முடிவுக்குக் ண்டு வந்தது, ஊடக சுதந்திரத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள், பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள், அமைதியாக ஒன்று கூடும் சட்டம் இயற்றப்பட்டது, தேச நிந்தனைச் சட்டம் மறு ஆய்வு செய்யப்படும் என்ற அறிவிப்பு, நாடு கடத்தும் சட்டம், வசிப்பிடக் கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகியவற்றை ரத்துச் செய்தது, தேர்தல் சீர்திருத்தங்களை அமலாக்கியது ஆகியவை அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
நஜிப் தேர்தலை நடத்துகிறார் ஆனால் அதிகாரத்தைக் கைவிடும் நோக்கம் இல்லை என்ற கூற்றையும் அகமட் ரோஸியான் மறுத்தார்.
“கடந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு எதிர்பாராத வகையில் அதிகமான இடங்கள் கிடைத்ததுடன் இணைத்துப் பார்க்கும் போது அந்தக் கருத்துத் தவறானது.”
“அடுத்த முறை மலேசியர்கள் தங்கள் நாட்டை யார் வழி நடத்த வேண்டும் எனத் தாங்கள் விரும்புன்றவரை மீண்டும் சுதந்திரமாகத் தேர்வு செய்வர். பிரதமர் எதனையும் உறுதி என நம்புவது இல்லை. என்றாலும் மலேசியாவின் உருமாற்ற நடவடிக்கைகளை தொடருவதற்கு தமக்கு அதிகாரம் கொடுக்கப்படும் என அவர் நம்புகிறார்,” என அந்தக் கடிதம் மேலும் குறிப்பிட்டது.