அரசாங்க இரகசியங்கள் அந்நிய நாடுகளுக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுவது மீது தற்காப்பு அமைச்சுக்கு ஏதும் தெரியாது.
இவ்வாறு அதன் அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி நேற்றிரவு நாடாளுமன்றத்தில் நள்ளிரவுக்கு பத்து நிமிடங்கள் முன்னதாகக் கூறினார்.
“அமைச்சைப் பொறுத்த வரையில் மலேசியாவிலிருந்து தகவல்கள் கசிந்ததற்கான ஆதாரம் இதுநாள் வரையில் ஏதுமில்லை,” என்றார் அவர்.
வரவு செலவுத் திட்ட துணை மசோதா தொடர்பில் உறுப்பினர்கள் விவாதம் நடத்திய பின்னர் ஸாஹிட் பேசினார்.
இராணுவ ரகசியங்கள் கசிந்ததாக கூறப்படுவது மீது விளக்கமளிப்பதாக அவர் ஏற்கனவே வாக்குறுதி அளித்திருந்தார்.
டிசிஎன்எஸ் துணை நிறுவனமான Thales International என அழைக்கப்படும் Thint Asiaவுக்கு Terasasi Hong Kong Ltd மலேசிய ரகசிய ஆவணங்களை விற்றதாகச் சொல்லப்படுவது பற்றி அமைச்சுக்கு ‘எந்தத் தகவலும்’ இல்லை என அவர் சொன்னார்.
மலேசியாவுக்கு இரண்டு ஸ்கார்ப்பின் ரக நீர்மூழ்கிகளை விற்பதில் சம்பந்தப்பட்டிருந்த நிறுவனங்களில் டிசிஎன்எஸ்-ஸும் ஒன்றாகும்.
Thint Asia-விடமிருந்து Terasasi-க்கு அவ்வப்போது பணம் கொடுக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுவது குறித்தும் அமைச்சுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றும் ஸாஹிட் சொன்னார்.
லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் நாடாளுமன்றத்தில் தெரிவித்த விஷயங்களுக்கு அவர் பதில் அளித்தார்.
புலனாய்வுப் பத்திரங்களை பெறுவதற்காக ஸ்கார்ப்பின் வழக்கு மீதான பிரஞ்சு பஞ்சாயத்து மன்றத்துக்கு பார்வையாளரை மலேசியா அனுப்புமா என்றும் நுருல் இஸ்ஸா வினவியிருந்தார்.
அதற்குப் பதில் அளித்த ஸாஹிட், அந்த விவகாரம் மீது பிரான்ஸில் வழக்கு விசாரணை ஏதும் நடைபெறவில்லை என்பதால் பார்வையாளரை அனுப்பும் விஷயமே எழவில்லை என்றார்.
பிரஞ்சு நீதிமன்றம் முதலில் புலனாய்வு முறையை பின்பற்றுகின்றன. டிசிஎன்எஸ் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுவது மீது தற்போது புலனாய்வுக் கட்டத்தில் அது உள்ளது. அது இன்னும் வழக்கு விசாரணை கட்டத்துக்கு செல்லவில்லை.