மக்களவையில் அரசியல் பேசும் எம்பிகளைக் கடிந்துகொண்டார் அவைத்தலைவர்

டேவான் ரக்யாட்டில் அரசியல் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கண்டித்த அவைத்தலைவர் பண்டிகார் அமின் மூலியா, அது “அவையின் நேரத்தை  வீணாக்கும் செயல்” என்று வருணித்தார்.

பேச வாய்ப்பு வழங்கப்படும்போது அதுவும் கேள்வி நேரத்தின்போது சம்பந்தபட்ட விசயங்கள் பற்றித்தான் பேச வேண்டும் என்றாரவர்.

தேவையில்லாமல் பேசிப் பலரும் நேரத்தை வீணடித்து விடுவதாகக் கூறிய அவைத்தலைவர், அதனால் நாடாளுமன்றப் பணியாளர்களும் நள்ளிரவுவரை காத்திருக்க வேண்டியிருப்பதை உறுப்பினர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

“நான் பேசும் நேரத்தைக் கட்டுப்படுத்தினால் எல்லாரும் குதிப்பார்கள்.ஆனால், பேச வாய்ப்பு கொடுக்கும்போது அரசியல் பேசாதீர்கள்…போதும்…டேவானில் அரசியல் வேண்டாம்.அதை வெளியில் வைத்துக்கொள்ளுங்கள்”, என்றார். 

முன்னதாக, விவசாய, விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் நோ ஒமாரிடம் துணைக் கேள்வி ஒன்றைக் கேட்ட எம்.குலசேகரன் (டிஏபி-ஈப்போ பாராட்), அமைச்சு அம்னோ உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட திட்டங்களில் மட்டுமே ஈடுபாடு காட்டுவதாகக் குற்றம் சாட்டியதை பண்டிகார் கண்டித்தார்.

“இந்த அமர்வில் மிகுந்த பொறுமையைக் கடைப்பிடிக்கிறேன். கேள்விகள் கேட்க அனுமதிப்பேன்.ஆனால், நீங்கள் ஈப்போ பாராட்டைப்போல் நடந்துகொண்டால் அதன்பின்னர் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டேன்.என்னைக் குறை சொல்லாதீர்கள்.யாங் பெர்ஹொர்மாட் (குலசேகரன்), நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது.அதை மாற்றிக்கொள்ள முடியுமா?”, என்றார்.

அந்த நேரத்தில் இப்ராகிம் அலி(சுயேச்சை-பாசிர் மாஸ்) எழுந்து, இனி குலசேகரன் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்.உடனே பண்டிகார்,“பாசிர் மாஸ், பாசிர் மாஸைப் பேசச் சொல்லி நான் அழைப்பு விடுக்கவில்லையே”, என்று அவருக்கும் ஒரு  குட்டு வைத்தார்.

-பெர்னாமா