ஒரு பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்டத்துக்கு குத்தகை வழங்கப்பட்டதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலையிட்டதை நிரூபிக்கும் முயற்சியின் கீழ் பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் இன்று அரசாங்க ஆவணங்களை வெளியிட்டுள்ளார்.
அந்தக் குத்தகை தொடக்கத்தில் Balfour என்ற Balfour Beatty-Invensys Consortiumக்கு வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.
ராபிஸி நஜிப்புக்கு எதிரானது எனக் கூறப்படும் தகவல்களை அம்பலப்படுத்தி வருகிறார். இது அதில் முதலாவதாகும்.
நஜிப் அந்த விவகாரத்தில் தலையிட்டு மற்ற டெண்டர்களை காட்டிலும் அதிகமான விலையைக் குறிப்பிட்டதாகக் கூறப்படும் ஜார்ஜ் கெண்ட் நிறுவனத்துக்கு அந்தக் குத்தகை கிடைக்குமாறு செய்தார் என ராபிஸி மேலும் குற்றம் சாட்டினார்.
அவர் இன்று பெட்டாலிங் ஜெயாவில் பிகேஆர் தலைமையகத்தில் நிருபர்களிடம் பேசினார்.
தமது குற்றச்சாட்டுக்கு ஆதரவாக அவர், நிதி அமைச்சின் கொள்முதல் குழுவின் ஜனவரி 25ம் தேதி கூட்டக் குறிப்புக்கள் எனக் கூறப்படும் ஆவணத்தின் பிரதிகளை அப்போது வழங்கினார்.
அந்தக் குறிப்புக்களில் நிதி அமைச்சருமான நஜிப், இரண்டாவது நிதி அமைச்சர் அகமட் ஹுஸ்னி முகமட் ஹானாட்ஸ்லா, நிதி அமைச்சின் தலைமைச் செயலாளர் வான் அப்துல் அஜிஸ் வான் அப்துல்லா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
எல்ஆர்டி விரிவுத் திட்டங்களை மேற்பார்வையிடும் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனமான Prasarana, அந்த 1,012,910,000 ரிங்கிட் குத்தகையை PDA Consortium என்னும் நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த யோசனையை நிராகரிப்பது எனக் குழு முடிவு செய்ததாக குறிப்புக்கள் கூறின.
ஆனால் அதற்குப் பதில் Balfour-ரை குத்தகையாளராகவும் விநியோகிப்பாளராகவும் குழு தேர்வு செய்தது என்றும் அந்தக் குறிப்புக்கள் தெரிவித்தன.
அந்த முடிவு நிதி அமைச்சின் கொள்முதல் பிரிவில் உள்ள ஒர் அதிகாரியான பாவ்சியா யாக்கோப் ஜனவரி 26ம் தேதி Prasarana-வுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராபிஸி அந்தக் கடிதத்தின் பிரதியையும் வழங்கினார்.
நிதி அமமச்சின் கொள்முதல் பிரிவி செய்த முடிவு மாற்றப்பட்டு ஜார்ஜ் கெண்ட் நிறுவனத்துக்கு குத்தகை சென்றதற்கு நஜிப்பின் தலையீடே காரணம் என அடுத்து ராபிஸி சொன்னார்.
தமது குற்றச்சாட்டுக்கு ஆதரவாக அடுத்த சில நாட்களில் மேலும் பல ஆவணங்களை வெளியிடப் போவதாக அவர் தெரிவித்தார்.
இன்னும் அந்தக் குத்தகை வழங்கப்பட்டது மீது அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை என்றாலும் ஜார்ஜ் கெண்ட் அந்தக் குத்தகையைப் பெற்றுள்ளது என்றும் விரைவில் அதிகாரத்துவ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறும் ஜனவரி 22ம் தேதி பிஸினஸ் டைம்ஸ் செய்தியை ராபிஸி சுட்டிக் காட்டினார்.
நஜிப் நான்கு பிரச்னைகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் என ராபிஸி கேட்டுக் கொண்டார்
1. அந்தக் குத்தகையை வழங்குவதற்கான முடிவு ஜனவரி 25ம் தேதி எடுக்கப்பட்ட வேளையில் அந்தக் குத்தகை தனக்குக் கிடைக்கும் என ஜார்ஜ் கெண்ட் எப்படி நம்பியது ?
2. நான் காட்டிய ஆவணம் போலியானது என்றால் நிதி அமைச்சின் கொள்முதல் குழு முடிவு செய்த பத்திரத்தில் தாம் கையெழுத்திட்டதை நஜிப் மறுக்க வேண்டும்.
3. தாம் ஏற்கனவே கூட்டாக ஒப்புக் கொண்ட டெண்டர் முடிவை நிரகாரிக்கும் அளவுக்கு தாம் மனதை மாற்றிக் கொண்டதற்கான காரணத்தை நஜிப் விளக்க வேண்டும்.
4. அந்தத் திட்டத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டதில் தாம் தலையிட்டது முழுக்க முழுக்க ஊழல் அம்சம் இல்லாதது அதிகார அத்துமீறல் இல்லாதது என்று மலேசியர்களை நஜிப் நம்ப வைக்க வேண்டும்