பாங்: புதிய ஐஜிபி பொறுப்பு ஏற்ற பின்னர் குற்றச் செயல்கள் குறைந்துள்ளன

தேசிய போலீஸ் படைத் தலைவராக இஸ்மாயில் ஒமார் பொறுப்பேற்ற காலத்துக்கு பின்னர் குற்றச்செயல்கள் பெரிதும் குறைந்துள்ளதைப் புள்ளிவிவரங்கள் காட்டுவதாக குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக போராடும் ரோபர்ட் பாங் கூறுகிறார்.

பொது மக்களுடைய எண்ணத்திற்கு மாறாக 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேசியப் போலீஸ் படைத் தலைவர் பதவியிலிருந்து ஒய்வு பெற்ற பின்னர் குற்றச்செயல்கள் குறைந்து வருகின்றன என அவர் சொன்னார்.

“நான் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை. மூசா ஐஜிபி-யாக இருந்த 2006ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையில் குற்றச் செயல்கள் விகிதம் கூடியிருப்பதை நீங்கள் காண முடியும்,” என்றார் அவர்.

குற்றச் செயல்கள் விகிதம் அதிகரித்து வருவதாக பொது மக்கள் கருதுவது தவறானது என்பதை விளக்குவதற்காக நடத்தப்பட்ட நிருபர்கள் சந்திப்பில் பாங் பேசினார்.

அவர் மலேசிய குற்றத் தடுப்பு அற நிறுவன அமைப்பின் நிர்வாக மன்ற உறுப்பினரும் ஆவார்.

“குற்றச் செயல்கள் விகிதம் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் கருதுகின்றனர். அது நியாயமான கருத்து என்றாலும் நாடு முழுவதும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது தான் உண்மை,” என்றார் அவர்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பல பெரிய கடைத் தொகுதிகளில் உள்ள கார் நிறுத்துமிடங்களில் அண்மைய காலமாக பெண்கள் மீது தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளதைத் தொடர்ந்து குற்றச்செயல்கள் பரவலாக நிகழ்வதாக பொது மக்களிடையே கருத்துக்கள் எழுந்தன.

சிலாங்கூரில் குற்றச் செயல்கள் குறைந்துள்ளதாகக் கூறிக் கொள்ளும் தவறான புள்ளி விவரத்தை அண்மையில் உள்துறை அமைச்சு வெளியிட்டதும் சர்ச்சையைத் தூண்டி விட்டுள்ளது. உண்மையான நிலவரத்தை அது பிரதிபலிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

குடி மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

அது குறித்து கருத்துரைத்த பாங், அதிகாரிகள் துல்லிதமான புள்ளிவிவரத்தைத் தருவது மிக முக்கியம் என்றார். பின்னர் அதனை திருத்தினால் அது அவர்கள் மீதான நம்பிக்கையை சிதறடித்து விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குற்றச் செயல் புள்ளிவிவரங்களை அரசியல் கட்சிகள் பெரிதுபடுத்தக் கூடாது என்றும் பாங் கேட்டுக் கொண்டார். அவ்வாறு செய்வதாக் பொது மக்களிடையே எதிர்மறையான எண்ணங்கள் ஏற்பட்டு விடும்.

மற்றவர்கள் மீது பழி போடுவதற்குப் பதில் குடி மக்கள் விழிப்பாக இருப்பதோடு குற்றச் செயல்களை குறைப்பதற்கான சமூகக் கூட்டு  முயற்சிகளில் பங்கேற்க வேண்டும் என்றும் பாங் வலியுறுத்தினார்.

குடிமக்களுக்கும் பெமாண்டு, மலேசிய குற்றத் தடுப்பு அற நிறுவனம் போன்ற அமைப்புக்களுக்கும் இடையில் இன்னும் அதிகமான கலந்துரையாடல்கள் நிகழ வேண்டும் என அவர் கருதுகிறார்.

“எங்களுடன் விவாதங்களை நடத்துங்கள். குடி மக்களிடமிருந்து கருத்துக்கள் கிடைக்காவிட்டால் போலீசார் திறமையாக இயங்க முடியாது.”

“எப்போதும் போலீசாரையும் நம்பியிருக்கவும் வேண்டாம். மக்களும் முன் வர வேண்டும்,” என்றார் அவர்.