ரிம2.71மில்லியனுக்கு கணக்குக் காட்ட அம்னோ தயாரா?

சிலாங்கூர் அம்னோ, கூட்டரசு அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடான ரிம2.71பில்லியனை அது எப்படிச் செலவிட்டது என்று கணக்குக் காண்பிக்கத் தயாரா என்று சிலாங்கூர் அரசு சவால் விடுத்துள்ளது.
கிரான் சிலாங்கூர்கூ( Geran Selangorku ) நிதி விநியோகம் பற்றிக் குறைகூறப்பட்டிருப்பதற்குப் பதிலடியாக அது இவ்வாறு கூறியுள்ளது.

“அந்தப் பணம் எப்படிச் செலவிடப்பட்டது, எங்கு, எந்தெந்தத் திட்டங்களுக்கு, எவ்வளவு செலவிடப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள சிலாங்கூர் மக்கள் விரும்புகிறார்கள்”, என்று சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிமின் அரசியல் செயலாளர் ஃபாக்கா ஹுசேன் கூறினார்.

கிரான் சிலாங்கூர்கூ நிதியை மந்திரி புசாருக்குத் தெரியாமலேயே தாம் பங்கிட்டுக் கொடுத்துவிட்டதாக சிலாங்கூர் பிஎன் ஒருங்கிணைப்பாளர் முகம்மட் ஸின் முகம்மட் குற்றம்சாட்டியிருப்பதற்கு பதிலளித்து ஃபாக்க இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அறிக்கையில் நீண்ட விளக்கம் அளித்துள்ள அவர், கடந்த ஆண்டு  பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோதே மந்திரி புசார் அந்த நிதி பற்றியும் விவரித்தார் என்றார். மாநில அரசு நிறுவனங்கள் வழங்கிய பணத்தைக்கொண்டு உருவாக்கப்பட்டதுதான் அந்த நிதி.

அந்த ரிம300மில்லியன் நிதியை ஒரு குழு நிர்வகிப்பதாக ஃபாக்கா கூறினார்.

“கிரான் சிலாங்கூர்கூ நிதியைக் கொண்டு சாக்கடைகள், சாலைகளின் மேற்பரப்பு ஆகியவற்றைச் சீர்படுத்தல்,மேம்பாலங்கள் அமைத்தல் போன்ற சிறிய, நடுத்தர மேம்பாட்டுத் திட்டங்கள் பிஎன் வசமுள்ள இடங்கள் உள்பட சிலாங்கூரின் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன”, என்றாரவர்.

அத்திட்டங்கள் பற்றிய விவரங்களை எவரும் கேட்டுப்  பெறலாம்.அவை பற்றி மாநில அரசு ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தி வந்துள்ளது.

“முகம்மட் ஸின்னுக்கோ மற்ற அம்னோ உறுப்பினர்களுக்கோ இன்னும் புரியவில்லையானால் அவர்களுக்குப் புரியும் வகையில் தனிப்பட்ட விளக்கம் அளிக்கவும் தயாராக இருக்கிறோம்”, என்றவர் கேலியாகக் குறிப்பிட்டார்.

 

TAGS: