பாரம்பரிய மருந்துகள் மசோதா முதல் வாசிப்புக்கு சமர்பிக்கப்பட்டது

சுகாதார அமைச்சு இன்று 2012ம் ஆண்டுக்கான பாரம்பரிய, துணை மருந்துகள் மசோதாவை மக்களவையில் முதல் வாசிப்புக்குச் சமர்பித்தது.

அந்தத் துறையில் தொழில் செய்கின்ற அனைவரும் முன்மொழியப்பட்டுள்ள பாரம்பரிய, துணை மருத்துவ மன்றத்தில் (Traditional and Complementary Medicine Council) பதிந்து கொள்ள வேண்டும் என அந்த மசோதா கேட்டுக் கொள்கிறது.

அவ்வாறு பதிந்து கொள்ளத் தவறினால் 30,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது ஈராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படும் போது விதிக்கப்படலாம்.

அந்தக் குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்கின்றவர்களுக்கான அபராதத் தொகை தொடர்ந்து அதிகரிக்கும்.

சுகாதாரத் துணை அமைச்சர் ரோஸ்னா அப்துல் ரஷீட் ஷிர்லின் அந்த மசோதாவைத் தாக்கல் செய்தார்.

இந்த நாட்டில் பாரம்பரிய துணை மருத்துவச் சேவைகளை மேற்பார்வையிடுவது அந்த மன்றத்தின் நோக்கமாக இருக்கும். அந்தத் தொழிலுக்குத் தேவைப்படும் தகுதிகளையும் மன்றம் நிர்ணயிக்கும்.

அந்த மன்றத்துக்கு சுகாதார தலைமை இயக்குநர் தலைவராக இருப்பார். சுகாதார அமைச்சின் பேராளர்கள், உள்நாட்டு பல்கலைக்கழக மருத்துவ ஆலோசகர்கள், அரசாங்கத்தில் பதிவு செய்து கொண்டுள்ள அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகியோரும் மன்றத்தில் இடம் பெற்றிருப்பர்.

பாதுகாப்பு இல்லாத முறைகளை பின்பற்றுகின்றவர்களையும் சம்பந்தப்பட்ட ஆணைகளை பின்பற்றத் தவறுகின்றவர்களையும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுமாறு உத்தரவிடுவதற்கும் மன்றத்துக்கு அதிகாரம் கொடுக்கப்படும்.

பாரம்பரிய மலாய், சீன, இந்திய மருத்துவங்கள், ஹோமியோபதி, துணை சிகிச்சைகள் ஆகியவை பாரம்பரிய, துணை மருத்துவச் சேவைகளில் அடங்கும்.

பெர்னாமா