காபேனா: மனித உரிமைகள் பாஹாசா மலேசியாவின் தொய்வுக்குக் காரணம்

னித உரிமைகளிலும் கல்வியிலும் காட்டப்படுகின்ற தாராளப் போக்கு தேசிய மொழி என்ற முறையில் பாஹாசா மலேசியாவின் நிலைக்கு மருட்டலை ஏற்படுத்தியுள்ளதாக காபேனா எனப்படும் தேசிய எழுத்தாளர் சங்க சம்மேளனம் கூறுகிறது.

அந்த இரண்டு அம்சங்களும் மற்ற மொழிகள் ‘மித மிஞ்சிய’ அளவுக்குப் பயன்படுத்தப்படுவதற்கு வழி கோலி விட்டன. அதனால் பாஹாசா மலேசியா தாழ்ந்த நிலையை எதிர்நோக்குவதாக காபேனா தலைவர் அப்துல் லத்தீப் அபு பாக்கார் கூறினார்.

“மலேசியா இப்போது எதிர்நோக்கும் பிரச்னை- எல்லா இடங்களிலும் நமது விருப்பம் போல் மொழிகளைப் பயன்படுத்துவதாகும். அவர்கள் தேசிய மொழிக்கு மரியாதை கொடுக்காததால்  என் மனம் புண்பட்டுள்ளது.”

“அத்தகைய போக்கிற்கு தாராளமயம், மனித உரிமைகள் போன்ற சிந்தனைகளே காரணம். அவை பாஹாசவை ஒதுக்கும் அளவுக்கு கொண்டு சென்று விட்டன,” என்று தேவான் பாஹாசா டான் புஸ்தாக்காவில் மலாக்கா கலைக் கழகத் தலைவராகவும் பணியாற்றும் அவர் சொன்னார்.

மற்ற மொழிகள் வளருவதற்கு அனுமதிக்கப்பட்டாலும் தேசிய மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என அப்துல் லத்தீப் வலியுறுத்தினார்.

“நாம் சிங்கப்பூர் அல்லது ஸ்விட்சர்லாந்தைப் போன்று இருக்க விரும்பவில்லை, அவை அடையாளம் இல்லாத சிறிய நாடுகள். அதனால் அவை ஆங்கிலத்தைத் தங்களது பொது மொழியாகப் பயன்படுத்துகின்றன.”

“மலேசியாவில் நமக்கு சொந்த மொழி உள்ளது. நாம் சீனா, ஜப்பான், தென் கொரியாவைப் போன்று இருக்க வேண்டும்,” என்றார் அவர்.

‘மசீச விசுவாசமாக இல்லை’

அதற்கு முன்னதாக கோலாலம்பூரில் மொழிக் கருத்தரங்கு ஒன்றில் அப்துல் லத்தீப் உரையாற்றினார். பொது இடங்களில் மொழிகள் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள 35 உறுப்பினர்களைக் கொண்ட கண்காணிப்பு மன்றத்தை அவர் அப்போது அறிமுகம் செய்தார்.

அரசாங்க அமைப்புக்கள் இரு மொழிகளைப் பயன்படுத்துவது சரி என்றாலும் மற்ற மொழிகளைக் காட்டிலும் பாஹாசா மலேசியாவுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

“எடுத்துக் காட்டுக்கு மசீச தனது பொதுக் கூட்டங்களை அந்நிய மொழிகளில் நடத்துவது விநோதமாக இருக்கிறது. அது விசுவாசமாக இல்லை என்பதை அது காட்டுகின்றது,” என்றார் அவர்.

விதிகளைப் பின்பற்றத் தவறுகின்றவர்களுக்கு மன்றம் ஆலோசனைகளை வழங்கும் என்றும் மன்றத்தின் எண்ணங்கள் பல்வேறு தரப்புக்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் காபேனா தலைவர் சொன்னார்.