அலுவல்சாரா தொழிலில் இந்தியர்களின் பங்களிப்பு!

இராகவன் கருப்பையா – கிக் தொழில்(Gig Business) எனப்படும் அலுவல்சாரா பகுதி நேரத் தொழில் தற்பொழுது நம் நாட்டில் மிகவும் பிரபலமான ஒரு தொழிலாக உள்ளது.

ஒரு மோட்டார் சைக்கிள் அல்லது கார் ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தொடக்கப்படும் இத்தொழிலுக்கு வயது வரம்போ, கல்வித் தகுதியோ சான்றிதழ்களோ தேவையில்லை.

உழைக்கத் தயாராய் உள்ளவர்களுக்கு ‘லாலாமூவ்,’ ‘கிரேப்,’ மற்றும் ‘ஃபூட் பண்டா,’ போன்ற எண்ணற்ற நிறுவனங்கள் இந்த தொழில் வாய்ப்புகளை வழங்குகின்றன.

முழு நேர வேலையில்லா இளைஞர்கள், பகுதி நேர வருமானம் ஈட்ட முனைவோர், பணி ஓய்வு பெற்றொர், உயர் கல்வி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் மற்றுமின்றி இளம் பெண்களும் கூட இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

மலாய்க்காரர்களும் சீனர்களும் அதிக அளவில் மிகுந்த உற்சாகத்துடன் இத்தொழிலை மேற்கொண்டுள்ள வேளையில் நம் சமூகத்தைச் சார்ந்தவர்களின் பங்களிப்பு மிகவும் குறைவுதான்.

இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில், அடாவடித்தனம் புரிவதிலும் நம் இளைஞர்கள்தான் முன்னிலை வகிக்கின்றனர்.

வாடிக்கையாளர்களிடம் மரியாதை குறைவாகப் பேசுவது, தூய்மையின்மை மற்றும் மதுபோதையில் இருப்பது போன்ற எண்ணற்றப் புகார்கள் நம் சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு எதிராக மட்டும்தான் அதிகமாக உள்ளது வருந்தத்தக்க ஒன்றாகும்.

அண்மையில் தலைநகரில் விஜி எனும் ஒரு கல்வியாளர் கூட தமது கசப்பான அனுபவத்தை ‘டிக் டொக்’ தளத்தில் மிகவும் வேதனையோடு பதிவு செய்திருந்தார்.

இயங்கலை வழி செய்யப்பட்ட அழைப்பை ஏற்று அவரை அலுவலகத்திற்கு ஏற்றிச் செல்ல வந்திருந்த ஒரு இந்திய இளைஞர், காரை முரட்டுத்தனமாகவும் படு வேகமாகவும் செலுத்தியிருக்கிறார்.

அந்தக் காரின் உள் பகுதி மிகவும் அசுத்தமாக இருந்தது மட்டுமின்றி, வானொலியின் இரைச்சலும் உச்சத்தில் இருந்ததாக விஜி தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

கை பேசியை பயன்படுத்த வேண்டியிருந்ததால் ஒலியை குறைக்குமாறு தாம் விடுத்த அறைக்கூவலுக்குக் கூட அந்த இளைஞர் செவிசாய்க்கவில்லை என்றார் அவர்.

“நிறைய தடவை மலாய்க்காரர்கள் மற்றும் சீனர்களின் சேவைகளை பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் இது போன்ற அனுபவத்தைப் பெற்றதில்லை,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

பிரிதொரு சம்பவத்தில்,   பெயர் குறிப்பிட விரும்பாத எழுத்தாளர் ஒருவரின் இல்லத்திற்கு புத்தகமொன்றை பட்டுவாடா செய்ய வந்த ஒரு இந்திய இளைஞர், நிர்ணயிக்கப்பட்டத் தொகையைவிட  இரண்டரை மடங்கு கூடுதலாக பணம் கோரியுள்ளார்.

“ஏன் இவ்வளவுத் தொகையை கேட்கிறீர்கள்,” என்று வினவிய போது, “அப்படியென்றால் நீங்களே சொந்தமாகப் போய் இந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டிருக்க வேண்டியதுதானே,” என முரட்டுத்தனமாக பேசிய அவர் மீது மதுபான வாடையும் வீசியிருக்கிறது.

இயங்கலை அழைப்பில் ஒரு காரின் எண்கள் பதிவாகியிருந்த போதிலும் வேறொரு நிறுவனத்தைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் அவர் வந்திருக்கிறார். இதுவெல்லாமே விதிகளை மீறியச் செயல்களாகும்.

பரிவின் அடிப்படையில் அவ்விளைஞர் மீது சம்பந்தப்பட்ட எழுத்தாளர் புகார் எதனையும் பதிவு செய்யவில்லை. இல்லையேல் அவர் சார்ந்த நிறுவனம் அவரை வேலையை விட்டு நீக்கும் நிலை கூட ஏற்படலாம்.

‘பனிப்பாறையின் முனை’ப்போலான, மேற்குறிப்பிட்ட 2 சம்பவங்களுமே, “இனிமேல் இந்திய இளைஞர்களின் சேவைகளை ஏற்கக்கூடாது,” என்று விரக்தியடையும் அளவுக்கு வாடிக்கையாளர்களுடைய மனங்களை பாதித்துள்ளது.

நம் சமூகத்தைச் சார்ந்த நிறைய இளைஞர்கள் இத்தொழிலை ஒழுக்கத்தோடு, உயர் நெறியுடன் மேற்கொண்டு நிறைவாக சம்பாதிக்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் குறிப்பிட்ட சிலரின் அடாவடித்தனமான போக்கினால் ஒட்டுமொத்த சமூகத்தின் நற்பெயருக்கும் கலங்கம் ஏற்படுகிறது என்பது வருத்தமான ஒன்றுதான்.