தேர்தல்கள் தாமதமடைவதற்கு நம்பிக்கை குறைவாக இருப்பதற்கான அறிகுறி அல்ல

பிஎன் வெற்றி மீது நம்பிக்கை குறைவாக இருப்பதால் தாம் பொதுத் தேர்தலுக்கான தேதியை வேண்டுமென்றே தள்ளிப் போடுவதாக எதிர்க்கட்சிகள் கூறிக் கொள்வதை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மறுத்துள்ளார்.

நாட்டை வழி நடத்தவும் ஆட்சிபுரியவும் மேம்பாட்டைக் கொண்டு வரவும் மக்களுக்காக போராடவும் மக்கள் பிஎன்-னுக்கு ஐந்து ஆண்டு காலத்துக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளதாக அவர் சொன்னார்.

“நாங்கள் திடீர் தேர்தல்களை நடத்தினால் மக்களுக்கு எங்களுக்கு வழங்கிய காலத்தை நாங்கள் குறைத்து விட்டதாகப் பொருள்படும்.”

“ஆகவே நம்பிக்கையில்லை என்ற கேள்விக்கே இடமில்லை. எங்களைப் பொறுத்த வரையில் மக்களுக்காகப் போராடும் எங்கள் ஆற்றலை மெய்பிப்பதே முக்கியமாகும்,” என நேற்றிரவு புத்ரா உலக வாணிக மய்யத்தில் பிஎன் உச்சமன்றக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பின்னர் நஜிப் நிருபர்களிடம் கூறினார்.

அரசாங்கம் அமல் செய்துள்ள உருமாற்றத் திட்டங்கள் குறித்து மக்கள்  வரவேற்றுள்ளதை அம்னோ தலைவரும் பிஎன் தலைவருமான நஜிப் சுட்டிக் காட்டினார்.

“எங்களுக்கு அகங்காரம் இல்லை”

தாமும் துணைப் பிரதமர் முஹைடின் யாசினும் மாநிலங்களுக்குச் செல்லும் போது அந்த ஆதரவைப் பார்க்கமுடிகிறது. மக்கள் மகத்தான ஆதரவு வழங்கி வருகின்றனர். பிஎன் மீது நம்பிக்கை கூடுவதை அது பிரதிபலிக்கிறது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

“எங்களுக்கு அகங்காரம் இல்லை. எங்கள் நம்பிக்கை அளவு, நாங்கள் வருகை புரியும் போதும் ஒரே மலேசியா கருப் பொருளைக் கொண்ட நிகழ்வுகளின் போதும் மக்கள் அளிக்கும் வரவேற்பை அடிப்படையாகக் கொண்டது.”

அரசாங்க உருமாற்றத் திட்டங்கள், பொருளாதார உருமாற்றத் திட்டங்கள் பற்றிக் குறிப்பிட்ட நஜிப், நாங்கள் அவற்றை செயல்படுத்தியுள்ளோம். ஆகவே எங்கள் நம்பிக்கை மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டது,”என்றார்.

மக்களுடைய ஒரே மலேசியா டாக்ஸி திட்டம் போன்ற பல்வேறு சமூகக் குழுக்களுடன் கலந்தாய்வு செய்வதை அந்தத் திட்டங்கள் சார்ந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

பெர்னாமா