சிங்கப்பூர் அரசதந்திரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மலேசியா விளக்குகிறது

கோலாலம்பூரில் ஏப்ரல் 28ம் தேதி தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரி நடத்தப்பட்ட பெர்சே 3.0 பேரணியில் மூன்று சிங்கப்பூர் அரசதந்திரிகள் கலந்து கொண்டதாக கூறப்படுவது தொடர்பில் கடந்த வியாழக்கிழமை ஸ்ட்ரெயிட்ஸ் டைமஸ் நாளேட்டில் வெளியான கடிதங்களுக்கு சிங்கப்பூரில் உள்ள மலேசியத் தூதரகம் பதில் அளித்துள்ளது.

முதலில் மலேசிய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கும் குறிப்பிட்ட சில அரசு சாரா அமைப்புக்களின் நடவடிக்கைகளுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்வது முக்கியம் என அந்தத் தூதரகத்தில் உள்ள அரசியல் பிரிவு செயலாளர் நிக் அடி அர்மான் கூறினார்.

அந்த விவகாரத்தை அரசதந்திர ரீதியில் தீர்ப்பதற்கு மலேசிய அரசாங்கம் மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதரை அழைத்த வேளையில் சம்பந்தப்பட்ட உணர்வுகளைக் கருத்தில் கொள்ளும் போது சில அரசு சாரா அமைப்புக்களுடைய நடவடிக்கைகள் வியப்பைத் தரவில்லை. அவை எதிர்பார்க்கப்பட்டவையே. ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நாளேட்டில் வாசகர்கள் எழுதியுள்ள கடிதங்கள் போன்றவையே அவை.

இரண்டாவதாக சிறியதாக இருந்தாலும் அரசதந்திரிகள் சட்டப்பூர்வமான பேரணி ஒன்றில் கலந்து கொள்வதற்கும் சட்ட விரோதமான பேரணி ஒன்றில் கலந்து கொள்வதற்கும் இடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இருப்பதை ஏற்றுக் கொள்வது அவசியமாகும்.

மலேசியா ஜனநாயக நாடு என்ற முறையில் சட்டப்பூர்வமான கூட்டங்களில் பங்கு கொள்வதிலிருந்து யாரையும் தடை செய்ததும் இல்லை. அதற்குக் கட்டுப்பாடும் விதித்தது இல்லை என அவர் மேலும் கூறினார்.

என்றாலும்  பெர்சே 3.0 பேரணி சட்டவிரோதமானது என்பதை நினைவில் கொள்வது முக்கியம் என்பதை நிக் அடி சுட்டிக் காட்டினார்.

“உள்ளூர் சட்டவிரோதப் பேரணிகளில் அந்நிய குடிமக்கள் பங்கு கொள்வது அவர்களுடைய ஈடுபாட்டின் நோக்கம் குறித்து சந்தேகங்களை ஏற்படுத்தி விடுவதோடு ஆர்ப்பாட்டங்களின் போது நிகழும் வன்முறைகளால் அரசதந்திரிகள் பாதிக்கப்பட்டு விட்டால் உபசரணை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும்,” என்றார் அவர்.

அதனால் வெளிநாடுகளில் பணியாற்றும் போது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்குமாறு மலேசிய அரசதந்திரிகளுக்குத் தொடர்ந்து நினைவூட்டப்படுகிறது என்றும் நிக் அடி சொன்னார்.

 

TAGS: