லீ குவான் இயூ-உடன் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுவதை லிம் கிட் சியாங் மறுக்கிறார்

முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் இயூ-வுக்குத் தாம் ஒரு காலத்தில் பத்திரிக்கை செயலாளராகப் பணியாற்றியதாக உத்துசான் மலேசியா கூறிக் கொண்டுள்ளதை டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங் மறுத்துள்ளார்.

1960ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தாம் நிருபராக வேலை செய்த காலத்தில் பிஏபி-யுடன் ஒரு போதும் சம்பந்தப்படவே இல்லை என லிம் விடுத்த அறிக்கை கூறியது.

உத்துசான் குற்றசாட்டுக்கள் “அப்பட்டமான பொய்கள்” என்றும் அவர் வருணித்தார்.

சிங்கப்பூர் கலாச்சார அமைச்சின் பத்திரிக்கைப் பிரிவில் “சில காலம்” வேலை செய்ததாகக் குறிப்பிட்ட அவர் தாம் ஒரு சமயத்தில் சிங்கப்பூர் தேசியப் பத்திரிக்கையாளர் சங்கத் தலைமைச் செயலாளராகவும் இருந்ததாகத் தெரிவித்தார்.

உத்துசான் மலேசியா”பொய்கள்- பத்திரிக்கை” என்ற தனது தோற்றத்துக்கு ஏற்ப செயல்படுகிறது என்றும் அவர் சொன்னார்.

உத்துசானுடைய ஞாயிறு பதிப்பான மிங்குவான் மலேசியாவின் Bisik-bisik பகுதியில் நேற்று வெளியான கட்டுரை பற்றி லிம் கருத்துரைத்தார்.

அவாங் செலாமாட் என்ற மர்மமான புனை பெயரில் எழுதப்பட்ட அந்தக் கட்டுரை, தீவகற்ப மலேசியாவில் தனது அவாக்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு சிங்கப்பூர் டிஏபி-யை பிரதிநிதியாகப் பயன்படுத்தும் எனக் குறிப்பிட்டது.

அவாங் செலாமாட் என்ற புனைபெயர் அந்த நாளேட்டின் மூத்த ஆசிரியர்கள் குழாமைக் குறிப்பதாக கருதப்படுகின்றது.

அந்த அவாக்கள் என்ன என்று  அவாங் செலாமாட் விவரமாகக் கூறவில்லை என்றாலும் பினாங்கு மாநில நிர்வாகத்தை பக்காத்தான் ராக்யாட் எடுத்துக் கொண்ட பின்னர் அந்த மாநில அரசாங்கத்துடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள லீ மேற்கொண்ட முயற்சிகள், பிஎன்-னை வீழ்த்துவதற்கு சிங்கப்பூர் கொண்டுள்ள நோக்கத்தை காட்டுவதாக தெரிவித்தார்.

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் நம்பிக்கையை அம்னோ இழந்து வருவதால் டிஏபி-யையும் பக்காத்தானையும் சிறுமைப்படுத்துவதற்கு தொடங்கப்பட்டுள்ள தீவிர இயக்கத்தின் ஒரு பகுதியே தமக்கு எதிரான தாக்குதல் என்றும் லிம் சொன்னார்.

அம்னோ இணைய எழுத்தர்கள் அதை விட மோசமானவர்கள்

இணையத்தில் தமக்கு எதிராக அதை விட மோசமான ஆத்திரத்தை மூட்டும் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த டிஏபி ஆலோசகர் குறிப்பிட்டார். அதற்கு அம்னோ “இணைய எழுத்தர்கள்” காரணம் என அவர் பழி சுமத்தினார்.

1969ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி தாம் கோலாலம்பூரில் இருந்து கொண்டு இனக் கலவரத்தைத் தூண்டி விட்டதாகக் கூறப்படுவதும் அவற்றுள் ஒன்று என அவர் சொன்னார்.

“உண்மையில் நான் 1969 மே 10,11,12,13 ஆகிய தேதிகளில் கோலாலம்பூரில் இல்லை. அந்த நேரத்தில் வெளியான ஊடகத் தகவல்களையும் போலீஸ் பதிவேடுகளையும் கொண்டு அதனை உறுதி செய்து கொள்ள முடியும்.”

நான் பண்டார் மலாக்கா நாடாளுமன்றத் தொகுதியில் நான் போட்டியிட்டேன். கலவரம் மூண்ட தினம் காலையில் நான் கோத்தா கினாபாலுவுக்கு பிரச்சாரத்தில் உதவுவதற்காக விமானத்தில் புறப்பட்டேன் என லிம் தொடர்ந்து கூறினார்.

தீவகற்ப மலேசியாவில் தேர்தல் முடிந்த பின்னர் சபா தேர்தல்கள் இரண்டு வாரங்களுக்குத் தாமதிக்கப்பட்டன.

“எல்லாவற்றையும் விட மிகக் கொடூரமான” குற்றச்சாட்டு என்னவெனில் இப்போது டிஏபி தலைமைச் செயலாளராக இருக்கும் என் புதல்வர் லிம் குவான் எங்-கிற்கு மே 13 கலவரத்தில் பங்கு இருந்ததாக கூறப்பட்டதாகும்,” என்றார் அவர்.

அப்போது லிம் குவான் எங்-கிற்கு வயது எட்டு என்பதை அந்த டிஏபி ஆலோசகர் சுட்டிக் காட்டினார்.

 

TAGS: