பெர்சே 3.0: அன்வார், அஸ்மின் மீது புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

எதிர்த் தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், மற்றும் இரண்டு பிகேஆர் தலைவர்கள் மீது பெர்சே 3.0 பேரணியின் போது தடுப்புக்கள் மீறப்பட்டதில் அவர்கள் சம்பந்தப்பட்டதாக கூறப்படுவது தொடர்பில் கூடுதலாக இன்று புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அந்த மூவர் மீதும் சட்டவிரோதப் பேரணியில் பங்கு கொண்டதாகவும் நீதிமன்ற ஆணையை மீறியதாகவும் ஏற்கனவே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஆகவே இது அவர்கள் மீது சுமத்தப்படும் மூன்றாவது குற்றச்சாட்டு ஆகும்.

அன்வார், பிஏஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, முன்னாள் பிகேஆர் உச்சமன்ற உறுப்பினர் பத்ருல் ஹிஷாம் ஷாஹரின் ஆகியோர் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதலாவது நபர்கள் ஆவர்.

ஏப்ரல் 28ம் தேதி பிற்பகல் மணி 2.30க்கும் 3.00 மணிக்கும் இடையில் சட்டவிரோதப் பேரணியில் பங்கு கொண்டதாகவும் நீதிமன்ற ஆணையை மீறியதாகவும் அந்த மூவர் மீது புதிய சட்டத்தின்  4(2)© பிரிவின் கீழ் மே 22ம் தேதி குற்றம் சாட்டப்பட்டது.

ஏப்ரல் 26ம் தேதி மாஜிஸ்திரேட் ஸாக்கி அஸ்ராப் ஜுபிர் கையெழுத்திட்ட அந்த நீதிமன்ற ஆணை, டாத்தாரான் மெர்தேக்காவிலும் ஜாலான் சுல்தான் ஹிஷாமுடின், ஜாலான் ராஜா, ஜாலான் கிளப் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள பகுதியிலும் பெரிய அளவில் கூடுவதற்குத் தடை விதித்தது.

குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் அவர்களுக்கு கூடினபட்சம் 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம். அபராதத் தொகை 2,000 ரிங்கிட் மேல் இருந்தால் அன்வாரும் அஸ்மினும் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் என்னும் தகுதியை இழக்க வேண்டியிருக்கும்.

மாஜிஸ்திரேட் ஆணையை மீறியதாக குற்றவியல் சட்டத்தின் 188வது பிரிவின் கீழ் இரண்டாவது  குற்றச்சாட்டையும் அவர்கள் எதிர்நோக்குகின்றனர்.

டாத்தாரான் மெர்தேக்காவைச் சுற்றிலும் போடப்பட்டிருந்த தடையை மீறுவதற்கு ராசா தொகுதி பிகேஆர் துணைத் தலைவர் ஆர் தங்கம், வழக்குரைஞர் ஜி ராஜேஷ் குமார், வேன் ஓட்டுநர் பார்ஹான் இப்ராஹிம் அல்லது அலியாஸ் ஆகியோரைத் தூண்டி விட்டதின் மூலம் அந்த மூவரும் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

அந்தக் குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டால் ஈராயிரன் ரிங்கிட் வரை அபராதம் அல்லது ஒரு மாத சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

மூவரும் குற்றச்சாட்டுக்களை மறுத்தனர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அன்வார், அரசியல் ஒடுக்குமுறைக்கு இது இன்னொரு எடுத்துக்காட்டு என ஆத்திரத்துடன் கூறினார்.

அந்த வழக்கு செப்டம்பர் 5ம் தேதி மீண்டும் தாக்கல் செய்யப்படும் என நீதிபதி அறிவித்தார்.