ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று காலையில் கோலாலம்பூரில் உள்ள மெர்தேகா சதுக்கத்தில் நாடு சுதந்திரம் பெற்ற 54 வது ஆண்டைக் குறிக்கும் வகையிலும் சபா, சரவாக்குடன் இணைந்த 47வது ஆண்டைக் குறிக்கும் வகையிலும் நடத்தப்பட்ட கொண்டாட்டங்களுக்காக ஒன்று கூடினர்.
ஆனால் மாலையில் இருள் படரத் தொடங்கிய வேளையில் அதற்கு சில சாலைகள் தள்ளி மிகவும் வேறு விதமான மக்கள் கூடத் தொடங்கினர். மாநகரின் வானாளாவிய கட்டிடங்களைக் கொண்டாடுவதற்காக அவர்கள் கூட வில்லை. மாறாக நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே உருவான அடக்கமான தேசியப் பாரம்பரியம் ஒன்றை கொண்டாடுவதே அவர்களுடைய நோக்கமாகும்.
“ஜாலான் பெட்டாலிங்கை பாதுகாப்போம்” என்னும் கருப்பொருளைக் கொண்ட மத்திம இலையுதிர் கால விழாவை ஒட்டி பண்பாட்டு நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டது. என்றாலும் கையகப்படுத்தக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கியிருக்கும் கட்டிடங்களைக் கொண்ட ஜாலான் சுல்தான் மீதும் அந்த நிகழ்வின் போது கவனம் செலுத்தப்பட்டது.
அந்த நிகழ்வுகளுக்கு கோலாலம்பூர் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபம் ஏற்பாடு செய்திருந்தது. அந்த அமைப்பும் கலைத் துறை போராளிகளும் சைனா டவுனின் பிரிக்க முடியாத பகுதியாக ஜாலான் பெட்டாலிங்குடன் ஜாலான் சுல்தானும் பாதுகாக்கப்படும் என நம்புகின்றனர்.
“ஜாலான் பெட்டாலிங், மலேசிய சீனர்களுடைய அனுபவம் என்பதால் பலர் அதனை தங்களுக்கு சொந்தமானது எனக் கருதுகின்றனர். பின்னர் மற்ற இனங்களும் இங்கு வசிக்கத் தொடங்கினர். ஜாலான் பெட்டாலிங், ஜாலான் சுல்தான் கோலாலம்பூர் பாரம்பரியக் கட்டிடங்கள் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்,” என கோலாலம்பூர் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத் தலைவர் பான் இயூ சிங் கூறினார்.
ஜாலான் சுல்தான், ஜாலான் ஹங் ஜெபாட் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள யான் கெங் நாடக சங்கத்தில் ஆதரவாளர்கள் கூடினர். அங்கு நிகழ்ந்த மேடைக் கூத்துக்களைப் பார்ப்பது மட்டும் அவர்கள் எண்ணமில்லை. காணாமல் போகக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கும் ஒரிடத்தை கடைசியாகப் பார்ப்பதும் அவர்கள் நோக்கமாகும்.
அந்த சங்கம் 1920ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டதாகும். கிள்ளான் பள்ளத்தாக்கு எம்ஆர்டி திட்டத்தின் கீழ் அந்தக் கட்டிடத்தின் தலைவிதியும் மற்றும் 30 கட்டிடங்களின் தலைவிதியும் அந்தரத்தில் நிற்கின்றன.
ஒர் உறுப்பை இழப்பது போலாகும்
முதலில் அந்த நிலத்தை கையகப்படுத்தி விட்டு பாதாள ரயில் பாதை அமைக்கப்பட்ட பின்னர் மேற்பரப்பில் உள்ள சொத்துக்களை மீண்டும் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைப்பது என அரசாங்கம் சமரச ஏற்பாட்டை செய்து கொண்டுள்ளது.
ஆனால் நில உரிமையாளர்களும் ஆதரவாளர்களும் இன்னும் சந்தேகக் கண்களுடன் பார்க்கின்றனர். ஏனெனில் அரசாங்கம் முதலில் முழுமையாக கையகப்படுத்த முனைந்தது. பின்னர் தங்கள் நிலம் எம்ஆர்டி செலவுகளை ஈடுகட்டுவதற்காக வர்த்தக மையங்கள் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
எம் ஆர் டி சேவையை வழங்க அரசாங்கமும் தனியார் நிறுவனங்களும் உண்மையில் விரும்பினால் அரசாங்கம் அதற்குப் பணம் கொடுக்க வேண்டும். எங்கள் தனியார் நிலத்தை அல்ல,” கொங் கிம் லியூ கூறினார்.
கொங் ஒரு தையல்காரர் ஆவார். அவருடைய தாத்தா காலத்திலிருந்து அவர் குடும்பம் அங்கு அந்தத் தொழிலை நடத்தி வருகிறது. அதே கட்டிடத்தின் கீழ்த் தளத்தில் அவரது கடை அமைந்துள்ளது.
“எங்கள் பண்பாட்டையும் வரலாற்றையும் யாரும் சீர்குலைக்கக் கூடாது என நாங்கள் அவர்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். நீங்கள் சைனா டவுனில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டால் அது ஒருவர் தமது உறுப்புக்களில் ஒன்றை இழப்பதற்கு ஒப்பாகும். 150 ஆண்டுகளாக கோலாலம்பூரை யாப் ஆ லாய் தோற்றுவித்தது முதல் அந்தக் கட்டிடம் அங்கு இருந்து வருகிறது. எங்கள் அடையாளம் வரலாற்றின் ஒரு பகுதியை அவர்கள் எடுத்துக் கொள்வதை நாங்கள் அனுமதிக்க முடியாது. நாங்கள் இறுதி வரை போராடுவோம்.”
மழை பெய்த போதிலும் அந்தக் கட்டிடத்தில் கூடிய மக்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. கொங்கின் உணர்வுகளை அவர்களும் பகிர்ந்து கொண்டனர்.
புக்கிட் பிந்தாங் எம்பி போங் கூய் லுன் -னும் அங்கு காணப்பட்டார். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் கூடிய பின்னர் சுவான் டெங் ( ஒளி விளக்கை அடுத்த தலைமுறைக்கு ஒப்படைப்போம்) பாடலை பாடிய பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்.
ஜாலான் சுல்தான் ஒளி விளக்கை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.