‘ஊழலுக்கான’ ஆதாரங்களை வழங்குமாறு மந்திரி புசார் சுவா-வுக்கு சவால்

மசீச இளம் தொழில் நிபுணர்கள் பிரிவுத் தலைவர் சுவா தீ யோங்,  சிலாங்கூர் மாநில அரசாங்கம் சம்பந்தப்பட்டுள்ளதாக தாம் கூறிக் கொள்ளும் ஒரு பில்லியன் ரிங்கிட் ஊழலுக்கான ஆதாரத்தை வழங்க வேண்டுமென அவருக்கு  சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் சவால் விடுத்துள்ளார்.

“அவர் ஏன் முன் வந்து தகவல்களை வெளியிடக் கூடாது ?” என இன்று நிருபர்கள் சந்திப்பில் காலித் வினவினார்.

சிக்கலான பரிவர்த்தனைகள் வழி மாநில அரசாங்கம் மறைத்து வைத்துள்ள ஒரு பில்லியன் ரிங்கிட் பெறும் ஊழலை அம்பலப்படுத்தப் போவதாக சுவா மருட்டியுள்ளதாக தி ஸ்டார் நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.

அந்தப் பரிவர்த்தனைகள் தொடர்பான எல்லா விவரங்களையும் வெளியிடுமாறும் விவசாய, விவசாயத் தொழில் துணை அமைச்சருமான சுவா சிலாங்கூர் அரசாங்கத்துக்குச் சவால் விடுத்திருந்தார்.

“நாங்கள் மிகவும் வெளிப்படையான தன்மைகளைக் கொண்ட நிராகமாகும்,” என வலியுறுத்திய காலித், சுவா குற்றச்சாட்டுக்கள் பற்றி எதுவும் தெரியாது என்றார்.