முந்தைய அரசு மலைச்சரிவுத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியது உண்டு என்பதை பினாங்கு பிஎன் ஒப்புக்கொள்கிறது. ஆனால், அந்த ஒப்புதல் எல்லாம் 250அடி(26.2மீட்டர்)க்கு மேல் எந்தத் திட்டமும் கூடாது என்ற வழிகாட்டும் உத்தரவு வருவதற்குமுன் வழங்கப்பட்டதாகும் என்கிறார் பினாங்கு பிஎன் தலைவர் டெங் சாங் இயோ.
500அடி(அல்லது 150மீட்டர்) உயரத்துக்குமேல் உள்ள ஒன்றுதான் மலையாகும் என்று மத்திய அரசு வரையறுத்திருப்பதாக பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு 2001-இல் அறிவித்திருந்தது.
தாம் 1992-இலிருந்து 1995வரை பினாங்கு முனிசிபல் மன்ற(எம்பிபிபி) உறுப்பினராக இருந்த காலத்தில் மாநிலத் திட்டக் குழுக்கூட்டங்களில் 250அடி உயரத்துக்குமேல் எந்தத் திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது இல்லை என்றும் சாங் இயோ கூறினார்.
நடப்பு அரசு, பல்வேறு மலைச்சரிவுத் திட்டங்களுக்கு அனுமதி அளித்தது முந்தைய அரசுதான் என்று பழிபோடுவதை அவர் குறைகூறினார். எம்பிபிபி 2006-இலிருந்து 2012வரைக்குமான ஆவணங்களை மட்டுமே வெளியிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர் ஏன் 1985-இலிருந்து ஆவணங்களை வெளியிடவில்லை என்றும் வினவினார்.
2008 மார்ச் மாதத்துக்குமுன் முந்தைய அரசு 250அடி உயரத்துக்குமேல் 37 திட்டங்களை மேற்கொள்ள அனுமதி அளித்தது என்று எம்பிபிபி கூறியதை அடுத்து அதற்கு ஆதாரங்களைக் காண்பிக்குமாறு மாநில பிஎன் கோரிக்கை விடுத்தது.அதைத் தொடர்ந்து அது தொடர்பான ஆவணங்கள் அவற்றின் இரகசியத்தன்மை அகற்றப்பட்டு கொம்டாரில் பார்வைக்கு வைக்கப்பட்டன.
ஆனால், அவற்றைப் பார்ப்பதற்கு அளிக்கப்படும் நேரம் குறைவு என்றும் அவற்றைப் படமெடுப்பதற்கும் அனுமதிக்கப்படவில்லை என்றும் பிஎன் தலைவர்கள் குறை சொல்லியியுள்ளனர்.
“ஒளிப்பதற்கு ஒன்றுமில்லை என்றால், (எம்பிபிபி) எல்லாவற்றையுமே காண்பிக்க வேண்டும்.எல்லா ஆவணங்களையும் பார்க்க நாங்கள் தயார்”, என்று சாங் இயோ நேற்று செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.
“இன்றைய நிலைக்கு முந்தைய அரசுதான் காரணம் என்றால் அதற்குத் தீர்வுகாண உதவவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
“அத்திட்டங்களால் குடியிருப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதுதான் முக்கியம்” , என்றவர் வலியுறுத்தினார்.
இப்போது அந்த ஆவணங்களைப் பார்வையிடும் காலம் 90 நிமிடங்களிலிருந்து மூன்று மணி நேரமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு பக்கத்துக்கு30சென் கொடுத்து ஆவணங்களின் ஒளிநகல்களையும் பெறலாம்.
மலைகளை அழிப்பதாகக் கூறப்படுவதை மறக்கிறார் குவான் எங்
பிஎன் நடப்பு அரசின்மீது பழி போட முயலவில்லை என்று கூறிய சாங் இயோ,மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணவே அது முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறினார்.
மலைச்சரிவுத் திட்டங்களுக்காக பல தரப்பினர் லிம் குவான் எங் அரசைக் குறைகூறுகிறார்கள்.ஆனால், முதலமைச்சர் 250அடிக்குமேல் எந்த மேம்பாட்டுத் திட்டத்துக்கும் தம் அரசு ஒப்புதல் அளித்ததில்லை என்று உறுதியாகக் கூறுகிறார்.
2008 ஏப்ரல் தொடங்கி இவ்வாண்டு மே மாதம்வரை 250அடி உயரத்துக்குமேல் 19 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.அவை “சிறப்புத் திட்டங்கள்” என்று வகைப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறிய எம்பிபிபி, அவை முந்தைய அரசால் 1996 செப்டம்பர் 13-இல் அங்கீகரிக்கப்பட்டவை என்று கூறியது. விதிமுறைகளைப் பின்பற்றும் பட்சத்தில் அவற்றை எம்பிபிபி-ஆல் நிராகரிக்க இயலாது.
ஆனாலும், கடுமையான விதிமுறைகளையும் சட்டங்களையும் இயற்றி அவற்றை மேம்பாட்டாளர்கள் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தலாம். அந்த அதிகாரம் எம்பிபிபி-க்கு உண்டு என்று சாங் இயோ கூறினார்.
திட்டங்கள் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டவையாக இருந்தாலும் அவையும் இந்த விதிமுறைகளைப் பின்பற்றத்தான் வேண்டும் என்றாரவர்.
“மேம்பாட்டாளர்கள் எவ்வளவோ நெருக்குதல் கொடுத்தபோதிலும் மலைச்சரிவு திட்டங்களை அதிகரிக்க நாங்கள் என்றும் விரும்பியதில்லை.
“அதற்காகவே பலர் எங்களைக் குறைகூறியுள்ளனர்.அதன் காரணமாக லோ யாட் குழுமம் போன்ற நிறுவனங்கள் பினாங்கைவிட்டே வெளியேறின”, என்றாரவர்.
இதே விவகாரம் பற்றிக் கருத்துரைத்த மாநில கெராக்கான் தலைவர் டாக்டர் டெங் ஹொக் நன், ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களை ரத்துச் செய்ய மாநில அரசால் முடியாது என்றாலும் மாநிலத் திட்டக்குழுத் தலைவர் என்ற முறையில் குவான் எங் கடுமையான விதிமுறைகளை கொண்டுவரலாம் என்றார்.
“பினாங்கில் நிலத்துக்குப் பற்றாக்குறை இருப்பதை அறிவோம்.ஆனால், சுற்றுச்சூழலுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்”, என்றாரவர்.