‘குடிமக்களை வேவு பார்ப்பதை நிறுத்தி குற்றங்களை எதிர்த்துப் போராடுங்கள்’

பிஎன் அரசாங்கம் அரசியல் கட்சிகளை வேவு பார்க்க போலீசின் சிறப்புப் பிரிவுக்கு(எஸ்பி) ஒதுக்கும் நிதியைக் குற்றச்செயல்களை எதிர்க்கும் போராட்டத்துக்கு திருப்பி விட வேண்டும் என்று  பிகேஆர் வலியுறுத்தியுள்ளது.

குற்றச்செயல்கள் மீதான விசாரணைக்குச் செலவாகும் தொகையைவிட அரசியல் கட்சிகளுக்கு எதிரான விசாரணைகளுக்குச் செலவிடப்படும் தொகை 2.8மடங்கு அதிகமாகும் என்று பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலும் கட்சியின் முதலீட்டு மற்றும் வணிகப் பிரிவின் தலைவர் வோங் சென்னும் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினர்.

குடிமக்கள்மீது 733,000 புகார்கள்

“2010-இல், போலீஸ் சிறப்புப் பிரிவு  நாட்டுக் குடிமக்கள்மீது தயாரித்திருந்த புகார்கள்- 733,000.அதே வேளை குற்றப்புலன் விசாரணை பிரிவு குற்றச்செயல்கள் மீது பதிவுசெய்த புகார்களின் எண்ணிக்கை 212,000.அந்த வகையில் அதன் செயல்பாடுகள் சிறப்புப் பிரிவின் செயல்பாடுகளில் 30விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளன”, என்று வோங் கூறினார்.

“சிறப்புப் பிரிவின் செயல்பாடுகளில் 90விழுக்காட்டை குற்றச்செயல்களை எதிரான போராட்டத்துக்குத் திருப்பிவிட வேண்டும் என அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.அரசாங்கம் அதைச் செய்யாவிட்டால், பாதுகாப்புக்கான மலேசியா வேண்டும் என்பதற்காக மக்கள் எதிர்வரும் தேர்தலில் பிஎன் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்”, என்றார் வான் அசிசா.

குற்றங்களைத் தடுக்கக் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ளாமல் மக்களை வேவுபார்ப்பதில் கவனம் செலுத்தும் அரசாங்கத்தை அவர் கடிந்துகொண்டார். அண்மைக்காலமாக, குற்றவாளிகள் துணிச்சலாகக் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றாரவர். 

“நான் என்ன செய்கிறேன் என்றுகூட ஆய்வு செய்துகொண்டிருப்பார்கள்.இங்குள்ள  செய்தியாளர்கள் என்ன செய்கிறார்கள்  என்பதையும் ஆராய்ந்துகொண்டிருப்பார்கள்”, என்று வோங்(வலம்) கூறினார்.

அரசாங்கம், மலேசியாவை போலீஸ்அடக்குமுறை கொண்ட நாடாக  மாற்றுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வான் அசிசா வலியுறுத்தினார்.

அரசாங்கம் போலீசை வைத்து நாட்டை ஆளக்கூடாது.குற்றங்களை எதிர்ப்பது போலீசின் பணி.அது அந்தப் பணியைத்தான் செய்ய வேண்டும்.

“இதை அரசாங்கம் செய்ய முடியவில்லை என்றால், மக்கள்,  பாதுகாப்பான ஒரு மலேசியாவுக்காக வரும் தேர்தலில் பாரிசான் நேசனல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர
வேண்டும்”.

வன்முறை சார்ந்த குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாகக் கூறிய வான் அசிசா,அதற்கு எடுத்துக்காட்டுகளாய்  முன்னாள் மலாக்கா முதலமைச்சர் ரகிம் தம்பி சிக் வீடு  கொள்ளையிடப்பட்டதையும்,வங்சா மாஜுவில் நான்கு ஏடிம்-கள் திருடப்பட்டதையும் ஜோகூர் பாருவில் சிங்கப்பூர் குடும்பம் கடத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.