பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், அம்னோவுக்கு எதிராக அவதூறான அறிக்கையை வெளியிட்டதாகக் கூறப்படுவது தொடர்பில் அவர் மீது மாநில அம்னோ எடுத்துள்ள நடவடிக்கையை கட்சி ஆதரிப்பதாக அம்னோ துணைத் தலைவர் முஹைடின் யாசின் கூறியிருக்கிறார்.
“எங்களுக்கும் கௌரவம் இருக்கிறது. சொல்லப்பட்டது அவதூறானது. நாங்கள் ஏதும் செய்யா விட்டால் மக்கள் அதனை நம்பத் தொடங்கி விடுவர்,” என அவர் சொன்னார்.
அவர் நிபோங் திபாலில் ‘மெர்தேகா ராயா’ விருந்து நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
லிம், ஜுலை முதல் தேதி நடந்த சாலை ஆர்ப்பாட்டங்களுக்கு பினாங்கு அம்னோவைக் குற்றம் சாட்டியதாகக் கூறப்படுவது மீதும், பினாங்கு டிஏபி அலுவலகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தீ வைப்பு முயற்சியில் அம்னோ சம்பந்தப்பட்டுள்ளது என லிம் கூறியதாகச் சொல்லப்படுவது மீதும் அவருக்கு எதிராக 30 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கைத் தொடுக்கப் போவதாக பினாங்கு அம்னோ மருட்டியுள்ளது.
ஜுலை முதல் தேதி கொம்தார் கட்டிடத்துக்கு வெளியிலும் பினாங்கு பாலத்திலும் நடந்த சாலை ஆர்ப்பாட்டங்களில் அம்னோ சம்பந்தப்பட்டுள்ளது என லிம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் டிஏபி அலுவலகம் மீது நடத்தப்பட்ட தீ வைப்பு முயற்சியில் அம்னோ சம்பந்தப்பட்டுள்ளதாக தாம் குற்றம் சாட்டவில்லை என லிம் தெரிவித்துள்ளார்..
மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால்….
அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் லிம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பினாங்கு அம்னோ தலைவர் ஜைனல் அபிடின் ஒஸ்மான், கடந்த செவ்வாய்க்கிழமை கோரியிருந்தார்.
அடுத்த நாள் லிம் ஏழு நாட்களுக்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும் இல்லை என்றால் 30 மில்லியன் அவதூறு வழக்கை எதிர்நோக்க வேண்டியிருக்கும் எனக் கோரும் அறிவிப்புக் கடிதம் ஒன்று லிம்முக்கு அனுப்பப்பட்டது.
லிம் முதலமைச்சராக இருக்கலாம் ஆனால் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல என முஹைடின் வலியுறுத்தினார்.
பெர்னாமா