சுவாராம் மீதான சோதனை, ஆணைக் ( warrant ) குளறுபடியால் நிறுத்தப்பட்டது

மலேசிய நிறுவன ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று ‘வழக்கமான சோதனைகளுக்காக’ இன்று பிற்பகல் மணி 3.00 வாக்கில் மலேசிய மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாரமின் அலுவலகத்திற்கு வருகை புரிந்தது. ஆனால் அந்தக் குழு கொண்டு வந்த ஆணை செல்லத்தக்கது அல்ல என்பது கண்டு பிடிக்கப்பட்டதால் அது திரும்பிப் போக நேரிட்டது.

அந்த ஆணையில் பதிவதிகாரி ஒருவர் கையெழுத்திட்டிருக்க வேண்டும். அதில் அவ்வாறு இல்லாததுடன் வந்தவரும் துணைப் பதிவதிகாரி ஆவார்.”

“நாளை அவர்கள் வருவதற்கு முடிவு செய்தனர்,” என சுவாராம் வாரிய உறுப்பினர் சிந்தியா கேப்ரியல் மலேசியாகினியிடம் கூறினார்.

சுவாராம் ஊழியர்களைப் பேட்டி காணவும் ஆவணங்களையும் கணக்குக்களையும் பார்வையிடவும் மலேசிய நிறுவன அதிகாரிகள் நால்வர் வந்ததாக கேப்ரியல் கூறினார்.

டிசிஎன்எஸ் என்ற பிரஞ்சு கப்பல் கட்டும் நிறுவனம் மலேசியாவுக்கு இரண்டு ஸ்கார்ப்பின் ரக நீர்மூழ்கிகளை விற்றதில் ஊழல் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவது மீது பிரஞ்சு அதிகாரிகள் விசாரணையைத்  தொடங்குவதற்கு சுவாராம் முன்னின்று போராடிய பின்னர் அதன் பெயர் மலேசியாவில் எல்லா இல்லங்களிலும் பிரபலமாகி  விட்டது.

அந்த விவகாரம் இப்போது பிரஞ்சு நீதிமன்றங்களுடைய விசாரணையைப் பொறுத்துள்ளது. டிசிஎன்எஸ்  அதிகாரிகளும் மலேசியப் பிரமுகர்கள், நிறுவனங்கள் ஆகிய தரப்புக்களும் சம்பந்தப்பட்ட சட்டவிரோதக் கையூட்டுக்கள் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஏசியன் செண்டினல் என்ற சஞ்சிகையின் ஆசிரியர் ஜான் பெர்தெல்சென் இணையத்தில் கசிய விட்ட நீதிமன்றத் தகவலின் படி அம்னோ, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அணுக்கமான நண்பரான அப்துல் ரசாக் பகிந்தா, மலேசிய அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களுடன்  தொடர்புடைய பல நிறுவனங்கள் ஆகியவை விசாரணையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

‘தேவை இல்லாத அச்சுறுத்தல்’

சுவாராம் மீதான சோதனை ‘தேவை இல்லாத அச்சுறுத்தல்’ என்றும் கேப்ரியல் கண்டனம் செய்தார்.

“ஸ்கார்ப்பின் பேரத்தில்  சம்பந்தப்பட்டுள்ள ஊழல் மீது நிகழும் விசாரணை மீது கவனம் செலுத்துவதிலிருந்து மக்களைத் திசை திருப்புவதே அந்த சோதனையின் நோக்கம்,” என அவர் வருத்தமுடன் கூறினார்.

மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் ஏன் ஒரு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை சுவாராம் விளக்க வேண்டும் என அம்னோ தொடர்புடைய அரசு சாரா அமைப்புக்கள் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அந்தச் சோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுவாராம் தனக்கு நிதி எங்கிருந்து கிடைக்கிறது என்பதையும் 2009ம் ஆண்டுக்கு பின்னர் அது பதிவு செய்த ஒரு மில்லியன் ரிங்கிட் வருமானத்திற்கு என்ன நேர்ந்தது என்பதையும் விளக்க வேண்டும் எனவும் அந்த அமைப்புக்கள் கேட்டுக் கொண்டன.

TAGS: