கந்தரகோளத்தில் 1மலேசியா, என்ன செய்யப் போகிறார் பிரதமர்?

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தம் 1மலேசியா கொள்கையைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்தால் உடனடியாக ஸ்ரீகாடிங் எம்பி முகமட் அசீஸ், உத்துசான் மலேசியா, பெர்காசா  ஆகிய  தரப்புகளைக் கண்டிக்க வேண்டும்.

அம்மூன்று தரப்பினரும் இனவாதிகள் என்றும் அவர்கள் நஜிப் நிர்வாகத்தின் 1மலேசியா கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கப் பார்க்கிறார்கள் என்றும் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.

“ நஜிப்பின் 1மலேசியா கொள்கையைப் புறக்கணித்து அதை  நார் நாராகக் கிழித்துப் போட்ட அம்னோவின் தீவிரவாத, இனவாத ஆதரவாளர்கள் கற்பனையான பயத்தை வளர்த்துக்கொண்டு பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனுக்கும் சிங்கப்பூருக்கும் எனக்கும் எதிராக தொடர்ந்து வெறுப்பூட்டும் இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார்கள்”, என்றார் லிம்.

முகம்மட் மக்களவையில்,ஜூன் 26-இல், கிட்டத்தட்ட 100,000பேர் ஒன்றுதிரண்ட பெர்சே 3.0பேரணிக்கு ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் என்பதற்காக அம்பிகாவைத் தூக்கிலிட வேண்டும் என்று பேசினார்.

அம்பிகாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

அதன் தொடர்பில் கருத்துரைத்த அம்பிகா, ஒரு வெறுப்பூட்டும் இயக்கத்துக்குத் தாம் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.முகம்மட்டின் பேச்சு தமக்கு எதிராக வெறுப்புக்கொள்ளவும் குற்றச்செயல்கள் புரியவும் தூண்டுதலாக அமையலாம் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

முகம்மட் அவ்வாறு பேசியதை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று மக்களவை கட்டாயப்படுத்தியதால் அவரும் மீட்டுக்கொண்டார்.ஆனால், அப்படிப் பேசியதற்காக அவர் அம்பிகாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்பதை லிம் சுட்டினார்.

“நஜிப் இந்தியர்களையும் இந்துகளையும் மகளிரையும் மதிப்பவராக இருந்தால், நிபந்தனையற்ற முறையில் அம்பிகாவிடம் மன்னிப்பு கேட்குமாறு முகம்மட் அசீசுக்கு உத்தரவிட வேண்டும்”, என்றாரவர்.

உத்துசான் பற்றிக் குறிப்பிட்ட லிம், மலாய்க்காரர்-அல்லாதாரைத் தீயவர்களாக சித்திரிக்கும் பணியைத் தொடரும் அந்நாளேடு இப்போது  சீனர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிங்கப்பூர், மலேசிய அரசியலில் தலையிட முயல்வதாகக் கூறியுள்ளது.

“பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதை வாடிக்கையாக”க் கொண்ட உத்துசான், டிஏபி, சிங்கப்பூரின் மக்கள் செயல் கட்சியிலிருந்து முளைத்து வந்தது என்றும் இரண்டுக்கும் தொடர்புண்டு என்றும் அதற்கு 2008-இல் முன்னாள் பிரதமர் லீ குவான் இயு பினாங்குக்கு மேற்கொண்ட வருகையே சான்று என்றும் கூறியுள்ளது.

பிரதமர் சிங்கப்பூரிடம் முறையிட வேண்டும்

லீ, பிஎன் ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்கும் சென்றதை உத்துசான் வசதியாக மறந்து விட்டது.

“அது சொல்வது உண்மையாயின், நஜிப் சிங்கப்பூரிடம் அதிகாரப்பூர்வமாக புகார் செய்ய வேண்டும்.

“இல்லையேல், மலேசியாவை பன்னாட்டு அளவில் கேலிக்கூத்தாக்கும் சிறுபிள்ளைத்தனமான செயல்களை நிறுத்திக்கொள்ளும்படி உத்துசானைப் பணிக்க வேண்டும்.”

தொடர்ந்து வன்செயல்களில் ஈடுபட்டு வரும் பெர்காசாவுக்கு  ஆதரவு அளிப்பதை நிறுத்திக்கொள்ளுமாறு பிரதமர் அம்னோவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் லிம் கேட்டுக்கொண்டார்.

“பினாங்கின் பக்காத்தான் முதலமைச்சரான நானே அவர்களின் பிரியமான இலக்கு”, என்றாரவர்.

இதுவரை பொதுமக்களும் செய்தியாளர்கள் இருவரும் பெர்காசாவால் தாக்கப்பட்டதாக புகார் செய்திருந்தும்கூட பெர்காசாவுக்கு எதிராக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார் லிம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பெர்காசாவைச் சேர்ந்த ஒருவர் பினாங்கு தெலுக் பாஹாங்கில் லிம்மை மோதித்தள்ள முற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்நபரை அங்கிருந்த சமூகத் தலைவர்கள் தடுத்து நிறுத்தினர்.