தாங்கா பத்து எம்பி இட்ரிஸ் ஹருனிடம் அடுத்த மலாக்கா முதலமைச்சராக பெயர் குறிப்பிடப்பட்டிருப்போரில் அவரும் ஒருவர் என்று கூறியதும் வாய் விட்டுச் சிரித்தார்.
அது உண்மையல்ல என்று கூறிய இட்ரிஸ், முதலமைச்சர் முகம்மட் அலி ருஸ்தமின் ஆள்களில் யாராவது ஒருவர்தான் அப்பதவிக்கு வருவார் என்றார்.
“(முகம்மட் அலி)பல தலைவர்களை உருவாக்கி வைத்திருக்கிறார். அவர்கள்மீது நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்”, என்றாரவர்.
முகம்மட் அலி மத்திய அரசுக்குச் சென்று அமைச்சர் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.
நியு சண்டே டைம்ஸுக்கு வழங்கிய நேர்காணலில் அந்த விருப்பத்தை வெளியிட்டிருந்த அவர், அந்த விருப்பத்தை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நிறைவேற்றி வைப்பார் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதன் தொடர்பில் மலேசியாகினி மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தலைவர் ஒத்மான் முகம்மட்டுடன் பேசியபோது, முதலமைச்சராகும் வாய்ப்புள்ளவர் என்று இட்ரிஸை அவர் குறிப்பிட்டார்.
வேறு இருவரின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டார். ஒருவர், மலாக்கா அம்னோவின் நீண்டகால உறுப்பினரும் நடப்பு உள்துறை துணை அமைச்சருமான அபு செமான் யூசுப். இன்னொருவர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கப்பார் அட்டான்.
மூவரும் அம்னோ தொகுதித் தலைவர்களாக சிறப்பாக பணி புரிந்திருப்பவர்கள் என்று ஒத்மான் தெரிவித்தார்.
இட்ரிஸ். தாங்கா பத்து தொகுதி தலைவர். அபு செலான், மஸ்ஜித் தானா தொகுதிக்கும் கப்பார், அலோர் காஜா தொகுதிக்கும் தலைவர்களாவர்.
“இவர்களின் பெயர்கள்தான் அம்னோவில் அடிபடுகிறது. பிரதமர் அவர்களைத் தேர்வு செய்யவில்லை. பிரதமர் சொந்தமாக சில தகுதிகளை நிர்ணயம் செய்து வைத்திருப்பார். அவற்றின் அடிப்படையில் தேர்வு செய்வார்.
“பெரும்பாலும் தொகுதித் தலைவராக இருப்பவர்தான் முதலமைச்சராக நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால் தொகுதி தலைவராக இல்லாதவர்கூட நியமனம் செய்யப்பட்டது உண்டு.”
முன்னாள் முதலமைச்சர் கப்பார் பாபாவின் கீழ் 18ஆண்டுகள் பணி புரிந்துள்ள ஒத்மான், முகம்மட் அலியின் இடத்தை நிரப்ப ஒருவரைத் தேர்ந்தெடுப்பது கடினமான செயலாகும் என்றார்.
“முகம்மட் அலியின் 12 ஆண்டுக்கால நிர்வாகத்தில் 20 ஆண்டுகளின் வேலையைச் செய்து முடித்திருப்பதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது. அவர் கடுமையான உழைப்பாளி. முன்னேரத்திலேயே வேலைக்கு வந்துவிடுவார்.இரவு நெடுநேரம் கழித்துத்தான் வீடு திரும்புவார்”, என்றார்.