மேல் முறையீடு செய்யப்பட வேண்டும் என சைபுலின் தந்தை விரும்புகிறார்

ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் முறையீட்டைச் சமர்பிக்க வேண்டும் என்று புகார்தாரரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லானுடைய தந்தையார் அஸ்லான் முகமட் லாஸிம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சில தரப்புக்களுடைய செல்வாக்கு காரணமாக முறையீட்டை ஏஜி அலுவலகம் சமர்பிக்காமல் போகக் கூடாது என்றும் அவர் சொன்னார்.

கடந்த வாரம் சரியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போலீசில் புகார் செய்ததாக சைபுல் தெரிவித்துள்ளார்.

“மக்கள் அவமானப்படுத்தினாலும் நான் அது குறித்து வருந்தவில்லை. அல்லாஹ்-வின் கண்களில் அப்படி இல்லை. நான் பொறுமையாக இருப்பேன். தொடர்ந்து பிரார்த்தனை செய்வேன்,” என சைபுல் டிவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்லான் தமது புதல்வருடைய வலைப்பதிவில் விடுத்துள்ள அறிக்கையில் “10 நாட்களுக்குள் ஏஜி அலுவலகம் முறையீட்டை சமர்பிப்பது மட்டும் பரிசீலிக்க வேண்டும் என்பதே இப்போது முக்கியமாகும். அதற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன,” எனத் தெரிவித்தார்.

தமது புதல்வர் கூட்டரசு அரசமைப்பை மதிக்கும் குடிமகன் என்ற முறையில் முறையீடு செய்யப்பட  வேண்டும் என விரும்புவதாகவும் அஸ்லான் சொன்னார்.

சில தரப்புக்களுடைய செல்வாக்கு காரணமாக முறையீட்டை ஏஜி அலுவலகம் சமர்பிக்காமல் போகக் கூடாது என்று வலியுறுத்திய அவர் அந்தத் தரப்புக்களை பெயர் குறிப்பிடவில்லை.

இதனிடையே குறிப்பிட்ட காலத்திற்குள் முறையீட்டை சமர்பிப்பதற்கு ஏஜி அலுவலகம் கடுமையாக உழைத்து வருவதாக நேற்று அந்த அலுவலகத்தின் வழக்கு விசாரணை முறையீட்டுப் பிரிவின் தலைவர் கமாலுதின் முகமட் சைட் கூறினார்.

பிகேஆர்: ஜோடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுக்கள் மீது விசாரணை தேவை

இன்னொரு நிலவரத்தில் அன்வாருக்கு எதிராக ஆதாரங்கள் ஜோடிக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதற்கான ஆதாரம் இருப்பதை எழுத்துப்பூர்வமான தீர்ப்பு தெளிவாகக் காட்டுவதாக பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

“போலீஸ் விசாரணை அதிகாரி முக்கியமான மாதிரிகள் இருந்த பையை தேவை இல்லாமல் வெட்டித் திறந்துள்ளார் என நீதிபதி ஜபிடின் கூறியுள்ளார். அது ஆதாரங்களை போலீஸ் சேதப்படுத்துவதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. அந்த மாதிரிகளில் குழப்பம் செய்வதற்கு அவருக்கு யார் உத்தரவு போட்டது ?”

“மாதிரிகள் வைக்கப்பட்டிருந்த பைகள் சேதப்படுத்தப்பட முடியாத பொருட்கள் அல்ல என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். அவற்றின் சீல்கள் அகற்றப்படவும் முடியும். மீண்டும் சீல் வைக்கவும் முடியும். நாட்டின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக ஆதாரங்களை சேதப்படுத்தி ஜோடிக்கும் நோக்கத்தை அதிகாரிகள் கொண்டிருந்ததையும் அது உணர்த்துகிறது.”

நீதிபதி ஜபிடினின் கண்டு பிடிப்புக்களைத் தொடர்ந்து அன்வார் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக அரசாங்கத் தரப்பு முறையீடு செய்து கொள்வதை நிறுத்துமாறு நஜிப்பையும் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லையும் சுரேந்திரன் கேட்டுக் கொண்டார்.