போலீசார் தியோ பெங் ஹொக் நாடகத்தைக் கூர்ந்து கவனிக்கிறார்கள்

அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹொக்கின் மரணத்தைச் சித்திரிக்கும் ‘பெங் ஹொக்’ என்னும் நாடகத்தை போலீசார் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள்.அந்நாடகம் இவ்வாரக் கடையில் மேடையேறவுள்ளது.

செவ்வாய்க்கிழமை போலீசாரிடமிருந்து ஓரு தொலைபேசி அழைப்பு வந்ததாக நாடகத் தயாரிப்பாளர் பைசல் முஸ்தபா கூறினார்.அதில் அவர் ஜிஞ்சாங் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.

விசாரணைக்குச் சென்றார்.ஆனால், அது முறையான விசாரணைபோல் இருக்கவில்லை என்கிறார் பைசல்.ஏனென்றால் அவரின் வாக்குமூலம் எழுத்தில் பதிவு செய்யப்படவில்லை.மற்றவற்றோடு நாடகக் கதையின் சுருக்கத்தைக் கூறுமாறு  அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.

ரூமா அனாக் தியேட்டர் என்னும் நாடக அமைப்பை நடத்திவரும் பைசல், அதிகாரிகள் நாடகத்துக்குத் தடை போடுவார்கள் என்று நினைக்கவில்லை.

“நாடகம் போட கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்திடம் அனுமதி பெறத் தேவையில்லை.ஏனென்றால், நுழைவுச் சீட்டுகளுக்கு நாங்கள் கட்டணம் விதிக்கவில்லை.

“அது தனியார் இடத்தில் போடப்படுவதால் போலீஸ் அனுமதியும் தேவையில்லை”, என்றாரவர்.

அது அரசியல் கலப்பற்ற நாடகம் என்பதால் அதிகாரிகள் அது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.

நாடகம்,தியோவின் மரணத்தைச் சூழ்ந்திருக்கும் மர்மத்தின்மீது கவனம் செலுத்துகிறது. அதன் மூலமாக மக்களிடையே ஒரு  விழிப்புணர்வை ஏற்படுத்தி அது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதுதான் நோக்கம் என்றாரவர்.

“ நாடகம் போடப்படுவதை விரும்பாத சில தரப்பினர் போலீசுக்கு நெருக்குதல் கொடுத்திருக்கலாம்”, என்றார் பைசல்.

தெரியாது என்கிறார் போலீஸ் தலைவர்

45-நிமிடம் போகும் அந்நாடகம், ஜூலை 6 தொடங்கி மூன்று நாள்களுக்கு கோலாலம்பூர் பெர்போமிங் ஆர்ட்ஸ் செண்டரில் Kuala Lumpur Performing Arts Centre (KLPAC) நடைபெறும்.

செந்தூல் வட்டாரத்தில்தான் நாடகம் மேடையேறுகிறது என்பதால் செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் சக்காரியா பகானைத் தொடர்புகொண்டு பேசியதற்கு நாடகம்மீது விசாரணை நடப்பது தமக்குத் தெரியாது என்றார்.

இதனிடையே, போலீசார் KLPAC நிர்வாகி இயன் செள-அவையும் அழைத்து கேள்விகள் கேட்டுள்ளனர்.ஆனால், அவர் அது “வழக்கமானதுதான்” என்கிறார்.

“நாடகங்கள் மேடையேறுமுன் அதிகாரிகள் அவை பற்றி விசாரிப்பது உண்டு.ஆனால், இம்முறை தயாரிப்பாளரிடமே பேசியிருக்கிறார்கள்.அதுதான் வேறுபாடு”, என்றார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இயன் யோங் ஹியான் வா-வின் உதவியாளரான தியோ,2009 ஜூலை மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்தின் சிலாங்கூர் தலைமையகத்தில் இறந்து போனார்.

இயன் ஹோங் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்காக அவர் சென்றபோது இது நிகழ்ந்தது.

அவரது மரணத்தை விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட அரச விசாரணை ஆணையம் மூன்று எம்ஏசிசி அதிகாரிகளுக்கு அவரது மரணத்தில் சம்பந்தம் உண்டு என்று கூறியது.ஆனால், அம்மூவரும் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பதால் மேல்நடவடிக்கை தேவையில்லை என்று கூறிவிட்டது சட்டத்துறைத் தலைவர் அலுவலகம்.

ஆனாலும், எம்ஏசிசி தலைவர் அபு காசிம் முகம்மட், அந்த அதிகாரிகளுக்கு எதிராக ஆணையம் கட்டொழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்று கடந்த மாதம் அறிவித்தார்.

சிலாங்கூர் எம்ஏசிசி விசாரணைப் பிரிவு முன்னாள் தலைவர் ஹிஷாமுடின் ஹசிம், விசாரணை அதிகாரி முகம்மட் அனுவார் இஸ்மாயில், உதவி சுப்பிரெண்டெண்டன் முகம்மட் அஷ்ரப் முகம்மட் யூனுஸ் ஆகியோரே அம்மூவருமாவர்.