துணைப் பிரதமர் முகைதின் யாசின் இந்திய மாணவர்கள் 557 பேருக்கு மெட்ரிக்குலேசனில் வாய்ப்பு வழங்குவதாக அறிவித்திருப்பது, அதுவும் ஒரே ஒரு முறைதான் அந்த வாய்ப்பு என்று அறிவித்திருப்பது, பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடந்த ஆண்டில் மஇகா தலைவர் ஜி.பழநிவேல் இந்திய மாணவர்களுக்கு அரசுப் பல்கலைக்கழகங்களின் மெட்ரிக்குலேசன் வகுப்புகளில் கூடுதல் இடங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் ஆயிரம் இடங்கள் வழங்குவதாக அறிவித்தார்.
அந்த வகையில் இவ்வாண்டு வழங்கப்பட்ட 1,539 இடங்களில் 943 நிரப்பப்பட்டிருக்கிறது. மீதமுள்ள இடங்களை நிரப்ப ஒரே ஒருமுறைதான் என்ற அடிப்படையில் சிஜில் பிலாஜாரான் மலேசியா (எஸ்பிஎம்)தகுதி உள்ள மேலும் 557 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனை விமர்சிப்பவர்கள் இதில் இனரீதியான ஒதுக்கீடு ஏன் என்றும் ‘ஒருமுறை’ வழங்கப்படும் வாய்ப்பு என முகைதின் குறிப்பிட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதை “ஆக்கப்பூர்வமான முன்னேற்றம்” என்று குறிப்பிட்ட எழுத்தாளர் உதய சங்கர் எஸ்.பி. இன்னொன்றையும் சொன்னார். இது, எதிர்காலத்தில் தகுதிபடைத்த மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை வழங்கவில்லை என்றார்.
இனரீதியாக இடம் ஒதுக்குவதைவிட மாணவர்களின் தகுதிகளுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
எதிர்காலப் பிரச்னைகளுக்குத் தீர்வு
“கல்வி அமைச்சர் அதை ‘ஒருமுறை வழங்கப்படும் வாய்ப்பு’ என்று கூறியுள்ளார். ஆக, எதிர்காலத்தில் உருவாகக்கூடிய பிரச்னைகளுக்கு அது தீர்வாக அமையாது.
“கல்வியைப் பொறுத்தவரை, மாணவர்களின் தகுதியைத்தான் பார்க்க வேண்டும். இனரீதியில் ஒதுக்கீடு கூடாது.அதுவும் இட ஒதுக்கீடுகளைக் காண்பித்து வாக்குகளுக்குத் ‘தூண்டில்’ போடுவது இன்னும் மோசமானது”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
மக்களின் கல்வித் தேவைகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால் கல்வியைத் தொடர விரும்புவோருக்கு, அதற்கான தகுதிகளையும் கொண்டோருக்கு ‘ஒருமுறைதான் வாய்ப்பு’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது என்று உதயா கூறினார்.
இட ஒதுக்கீட்டை உயர்த்துவதுதான் இந்தியர்களின் கல்விப் பிரச்னைகளுக்குத் தீர்வு என்பதை இண்ட்ராப் தலைவர் பி.உதயகுமாரும் நிராகரித்தார். இனவேறுபாடின்றி தகுதியுள்ள எல்லா மாணவர்களுக்கும் அவ்வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றாரவர்.
மலேசியாகினி உதயகுமாரைத் தொடர்புகொண்டு பேசியபோது, “என்னைப் பொறுத்தவரை, (எஸ்பிஎம்-மில்) 5ஏக்களும் அதற்குக் கூடுதலாவும் வைத்திருப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்கும். இன-அடிப்படையிலான கொள்கைகள் அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும்”, என்றார்.
இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டதாகக் கூறப்படுவதிலும் அவருக்கு நம்பிக்கை இல்லை.அரசாங்கம்,கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றிவிட்டதை நிரூபிக்க மெட்ரிக்குலேசன் படிப்புக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட மாணவர்களின் பட்டியலை வெளியிடத் தயரா என்றும் அவர் வினவினார்.
சமூகத்தை ஏமாற்றும் செயல்
“அது உண்மையா பொய்யா என்பது எங்களுக்குத் தெரியவில்லையே, கல்வி அமைச்சின் அகப்பக்கத்தில் அந்தப் பட்டியலை வெளியிடக்கூடாதா?”, என்றாரவர்.
இது தீராத பிரச்னை என்று குறிப்பிட்ட உதயகுமார் இதன் தொடர்பில் இண்ட்ராப், பிரதமருக்கு ஒவ்வோராண்டும் கடிதம் அனுப்பி வருவதாகக் கூறினார்.கடிதத்தில் தேதியும் புள்ளிவிவரமும் மட்டும்தான் மாறும். மற்ற விவரங்கள் எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்றார்.
ஒருமுறைதான் இந்த வாய்ப்பு என்று குறிப்பிட்டிருப்பது பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரனுக்கும் குழப்பத்தைத் தந்துள்ளது. “எதற்காக ஒருமுறைதான் என்று குறிப்பிட வேண்டும்?அடுத்து வருவோர் நிலை என்ன?
“இது இந்திய சமூகத்தை ஏமாற்றும் செயலன்றி வேறொன்றுமில்லை” என்றவர் சொன்னார் .
இது ஒரு தேர்தல் தந்திரம்.வாக்குகளுக்காக ரொக்கப்பணம் வழங்குவது போன்றதுதான் இது என்று குறிப்பிட்டவர், அதைக் கேட்டு “அதிர்ந்துபோனதாக” கூறினார்.
“ இனவேறுபாடின்றி தகுதிவாய்ந்த எல்லா மாணவர்களுக்கும் மெட்ரிக்குலேசன் பயில இடம் வழங்க வேண்டும். எந்த மாணவருக்கும் இடமில்லை என்ற நிலை கூடாது”, என்று மலேசியாகினி தொலைபேசி வாயிலாக நடத்திய நேர்காணலில் அவர் கூறினார்.
மெட்ரிக்குலேசனில் கவனம் செலுத்துவதில் தொழில்பயிற்சிகள் தேவைப்படும் மாணவர்கள் கவனிக்கப்படுவதில்லை.
அதன் விளைவாக, பயிற்சி பெற்று நல்ல வேலைகளைத் தேடிக்கொள்ள முடியாத அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் சுரேந்திரன் கூறினார்.
மஇகாவிலும் குழப்பம்தான்
முகைதின் அறிவிப்பைத் தற்காத்துப் பேசினார் மஇகா தலைமைச் செயலாளர் எஸ்.முருகேசன்.
முருகேசன் சார்பில் பேசிய மஇகா அதிகாரி ஒருவர், 557 இடங்கள் வழங்கப்பட்டிருப்பதை நிரப்பப்படாமலிருக்கும் இடங்களை நிரப்புவதற்குக் கொடுக்கப்பட்ட கடைசி வாய்ப்பாகத்தான் கட்சி கருதுகிறது என்றும் இதை வைத்து அடுத்த ஆண்டில் குறைவான இடங்களே ஒதுக்கப்படும் என்று அர்த்தப்படுத்திக் கொண்டுவிடக்கூடாது என்றும் சொன்னார்.
கட்சி அப்படித்தான் எடுத்துக்கொள்கிறது.துணைப் பிரதமர் ஒருவரால் மட்டுமே அதை உறுதிப்படுத்த முடியும் என்றாரவர்.
இதனிடையே, இந்தியர்களுக்கு மெட்ரிக்குலேசனில் கூடுதல் இடங்கள் பெற மஇகா ஒவ்வோராண்டும் முயற்சி மேற்கொண்டு வரும் என்றாரவர்.
மெட்ரிக்குலேசனில் கூடுதல் இடங்கள் வழங்கப்பட்டிருப்பதை மஇகா இளைஞர் தலைவர் டி.மோகனும் வரவேற்றார். அது “பிரதமர் இந்திய சமூகத்துக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றியுள்ளதைக் காண்பிக்கிறது” என்றார்.
எஸ்பிஎம்-மில் நல்ல தேர்ச்சிபெறும் எல்லா மாணவர்களுக்கும் இடம் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்படுவதை அவரும் ஏற்கிறார்.அதே வேளையில் வேறு சில விசயங்களையும் கவனிக்க வேண்டும் என்றார்.
சில மாணவர்கள் மற்றவர்களைப்போல் உயர்ந்த தேர்ச்சி நிலையை அடைய முடியாதவர்களாக இருக்கலாம்.அவர்களுக்குக் கூடுதல் வசதிகள் கிடைக்காதது இதற்குக் காரணமாக இருக்கலாம்.
“இவர்களையும் சேர்த்துக்கொள்ள ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும்.”
தொழிற்பயிற்சிக் கல்வி போதுமான அளவில் இல்லை என்று கூறப்படுவதை அவர் நிராகரித்தார். அதற்கு நிறைய பள்ளிகள் உள்ளன.
அவற்றில் தேவையான பயிற்சிகளைப் பெற்று வேலை தேடிக்கொள்ள முடியும் என்றார்.