செல்கேட்: பிஜே ஊராட்சித் திட்டம் 2-ஐ ரத்து செய்க

 அரசு இதழில் வெளியிட்டுள்ள பெட்டாலிங் ஜெயா ஊராட்சித் திட்டம் 2(பிஜேஎல்பி2) சட்டத்தை அனுசரித்துச் செல்லவில்லை என்பதால் ரத்துச் செய்யப்பட வேண்டும் என திறமை,பொறுப்புடைமை, வெளிப்படைத்தன்மை மீதான சிலாங்கூர் தேர்வுக்குழு (செல்கேட்) கூறியுள்ளது.

“மாநில சட்ட ஆலோசகரின் ஆலோசனைப்படி அதை ரத்துச் செய்யும் உரிமை மாநில அரசுக்கு உண்டு”, என செல்கேட் தலைவர் தெங் சாங் கிம் கூறினார்.

நேற்று ஷா ஆலாமில், சிலாங்கூர் மாநில பொருளாதார மேம்பாட்டுக் கழக(பிகேஎன் எஸ்)த்துக்குச் சொந்தமான திடலில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள முன்மொழியப்பட்டிருப்பது மீதும் பிஜேஎல்பி2 மீதும் பொதுமக்களின் கருத்தைக் கேட்டறிந்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

பிஜேஎல்பி2-இல் பிகேஎன்எஸ்-ஸின் திடலொன்று வணிக மண்டலம் எனக் குறிக்கப்பட்டிருந்து பெரிய சர்ச்சையை உண்டுபண்ணியது. சிலாங்கூர் மாநில நகர் திட்டத்துறை (ஜேபிபிடி)யின் ஆவணங்களின்படி அது பொழுதுபோக்கு அம்சங்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு பகுதியாகும்.

பிஜேஎல்பி2 பல பலவீனங்களைக் கொண்டிருப்பதாகக் கூறிய தெங், அதைமீட்டுக்கொள்ளாவிட்டால், அதன்மீது யார் வேண்டுமானாலும் வழக்கு தொடரலாம் என்றார்.

பொது விசாரணையில் தெரிந்துகொண்ட  விசயங்களை செல்கேட் அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யும். திங்கள்கிழமை கூட்டத்தில் தாக்கல் செய்யலாம் என்றால் அறிக்கை தயாரிக்க போதுமான நேரமில்லை என்றாரவர்.