இந்த ஆண்டு முடிவதற்குள் அனைத்து விதமான இன வேறுபாடுகள் அகற்றப்படுவது மீதான அனைத்துலக ஒப்பந்தத்தை (ஐசெர்ட்) அங்கீகரிக்குமாறு அரசாங்கத்தை பல அரசு சார்பற்ற அமைப்புகள் கேட்டுக்கொண்டன.
“ஐசெர்ட் இப்போதே அங்கீகரிக்கப்பட வேண்டும்” என்ற பரப்புரையை நேற்று தொடக்கி வைத்த பின்னர் மெனாரா பிகேஎன்எஸ்சில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஐசெர்ட் தேசிய அங்கீகாரம் மீதான செயற்குழு இக்கோரிக்கையை விடுத்தது.
இது கித்தா, தெனாகானித்தா, சயா அனாக் பங்சா மலேசியா, விடுதலைக்கான வழக்குரைஞர்கள், மனித உரிமைகள் வளர்ச்சிக்கான மன்றம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். டிசம்பர் 31, 2012 க்கு முன்னதாக ஐசெர்ட் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படுவதை உறுதிசெய்துகொள்ள இச்செயற்குழு விரும்புகிறது.
இச்செயற்குழுவின் தலைவரான ஜெரால்ட் ஜோசப் மலேசியா ஐநா மனித உரிமைகள் கழகத்தின் உறுப்பினரான போதிலும் அது இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்காத நாடுகளில் ஒன்றாகும் என்று குறிப்பிட்டார்.
“மலேசியா தவிர, 16 நாடுகள் மட்டுமே ஐசெர்ட்டை அங்கீகரிக்கவில்லை. அவற்றில் வடகொரியாவும் அங்கோலாவும் அடங்கும். இவற்றுடன் நாம் இருக்க வேண்டுமா?,” என்று அவர் வினவினார். அனைத்து இனங்களும் சமத்துவமாக இருப்பதை உறுதி செய்வதற்கான அரசியல் திண்மையை அதிகாரத்தினர் பெற வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
இக்குழுவினர் இது சம்பந்தமான ஒரு தேசிய மாநாட்டை செப்டெம்பர் 11இல் கூட்டவிருக்கின்றனர். ஒரு வட்டமேசை கூட்டம் ஜூலை 16 இல் நடத்தப்படும். இந்த விவகாரம் குறித்து மக்களிடையே விழுப்புணர்வை ஏற்படுத்த பேஸ்புக் பரப்புரைக்கு ஏற்பாடு செய்யப்படும்.
நேற்று நடைபெற்ற இந்த கருத்துப்பறிமாற்ற நிகழ்வில் புசாட் கோமாஸ் உறுப்பினர் ஜெரால்ட் ஜோசப், மரினா மகாதிர், சித்தி காசிம், ஐநா ஒருங்கிணைப்பு நிபுணர் லிம் முய் கியாங், பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகு, விடுதலைக்கான வழக்குரைஞர்கள் அமைப்பின் லதீபா கோயா ஆகியோர் கலந்து கொண்டனர்.