எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை சேர்ந்த உதவி சூப்பரிடெண்ட் ஒருவருக்கு 2.275மில்லியன் ரிங்கிட் சம்பந்தபட்ட ஊழல் குற்றச்சாட்டின் பேரில் மொத்தம் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
39 வயதான மோகன் என்பவருக்கு ஷா அலாம் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஸ்கானிஸ் தே அஸ்மான் தே அந்தத் தண்டனையை வழங்கினார்.
அரசுத்தரப்பு வாதங்கள் மீது சந்தேகத்தை எழுப்புவதற்கு பிரதிவாதித் தரப்புத் தவறி விட்டதாக நீதிபதி தமது தீர்ப்பில் கூறினார்.
மோகனுக்கு முதல் குற்றச்சாட்டின் பேரில் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 1.25 மில்லியன் ரிங்கிட் அபராதத்தையும் அவர் விதித்தார். அந்த அபராதத்தை மோகன் கட்டத் தவறினால் 60 மாத காலச் சிறைத் தண்டனையை அவர் விதித்தார்.
தேசியப் பதிவுத் துறை, குடி நுழைவுத் துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுவது தொடர்பில் ஏ சின்னையா என்பவர் மீது விசாரணைகளைத் தொடராமல் இருப்பதற்கு தூண்டுதலாக 250,000 ரிங்கிட்டை மோகன் கோரியதாக முதல் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நோக்கத்துக்காக சின்னையாவிடமிருந்து 200,000 ரிங்கிட்டை ஏற்றுக் கொள்வதற்கு ஊழல் ரீதியாக மோகன் ஒப்புக் கொண்டதாக இரண்டாவது குற்றச்சாட்டு தெரிவித்தது. அதன் கீழ் அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஒரு மில்லியன் ரிங்கிட் அபராதமும் அதனைக் கட்டத் தவறினால் 50 மாதச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
அந்த இரண்டு குற்றச்சாட்டுக்களும் ஷா அலாம் பிளாஸ் மாஸாலாமில் இருந்த சிலாங்கூர் எம்ஏசிசி அலுவலகத்தில் 2009ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி முற்பகல் 11 மணிக்கும் பிற்பகல் 1 மணிக்கும் இடையில் புரியப்பட்டதாக கூறப்பட்டது.
அதே நோக்கத்துக்காக சின்னையாவிடமிருந்து சிலாங்கூர் பாண்டான் இண்டாவில் உள்ள உணவு விடுதி ஒன்றில் சின்னையாவிடமிருந்து 5,000 ரிங்கிட்டைப் பெற்றதாகக் கூறப்பட்டது தொடர்பிலும் மோகன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு அதற்காக 133 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 25,000 ரிங்கிட் அபராதமும் அதனைக் கட்டத் தவறினால் எட்டு மாதச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
மோகன் எல்லா தண்டனைகளையும் ஒரே சமயத்தில் இன்று தொடக்கம் அனுபவிக்க வேண்டும் என்றும் அஸ்ஹானிஸ் தே ஆணையிட்டார்.
என்றாலும் மோகன் வழக்குரைஞர் ஆர் ராதா கிருஷ்ணன் சமர்பித்த முறையீட்டைத் தொடர்ந்து சிறைத்தண்டனையை நிறுத்தி வைப்பதற்கு நீதிபதி அனுமதித்தார். ஆனால் அபராதத்தை மோகன் கட்ட வேண்டும் என உத்தரவிட்டார்.
மோகன் 18 ஆண்டுகள் எம்ஏசிசியில் பணியாற்றியுள்ள போதிலும் தண்டனையை நிறுத்தி வைப்பதற்கு சிறப்பு சூழ்நிலைகள் இல்லை என வாதாடிய அரசு தரப்பு வழக்குரைஞர் டிபிபி நிக் அஸ்ரின் ஜைரின் நிக் அப்துல்லா தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.
பெர்னாமா