தலாம் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை பற்றி சிலாங்கூர் மந்திரி புசார் விளக்கமளிப்பார்

தலாம் கார்ப்பரேஷன் பெர்ஹாட் சம்பந்தப்பட்ட கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை விவரங்களை திங்கட்கிழமை தொடங்கும் சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் மாநில அரசாங்கம் அறிவிக்கும்.

ஊடகங்களுக்கு அந்த நடவடிக்கை பற்றி முழுமையாக விளக்குவதற்கு தேவையான நடைமுறைகளையும் மாநில அரசாங்கம் பின்பற்றும் என்றும் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் இன்று கோம்பாக்கில் கூறினார்.

மசீச மீது வழக்குப் போடவும் சிலாங்கூர் அரசாங்கம் எண்ணியிருப்பதாகவும் அவர் சொன்னார்.

“அவர்கள் முதலில் தங்களிடம் உள்ள அனைத்தையும் வெளியிட அனுமதிப்போம். முதலில் ஒரு பில்லியன் ரிங்கிட் என்றார்கள். அடுத்து 260 மில்லியன் ரிங்கிட் எனச் சொன்னார்கள். அவர்களுடைய கணக்குகளை செவிமடுப்பது எனக்கு மிகவும் வேடிக்கையாக இருக்கிறது,” என காலித் சிலாங்கூர் அரசின் அடுத்த நடவடிக்கை பற்றி வினவப்பட்ட போது தெரிவித்தார்.

சிரமத்தை எதிர்நோக்கியிருக்கும் அந்தக் கட்டுமான நிறுவனத்தை காப்பாற்றுவதற்கு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ் சிக்கலான கணக்கு முறைகள் வழி சிலாங்கூர் மாநில அரசாங்கம் 260 மில்லியன் ரிங்கிட்டை பயன்படுத்தியுள்ளதாக மசீச இளம் தொழில் முனைவர்கள் பிரிவுத் தலைவர் சுவா தீ யோங் கூறிக் கொண்டுள்ளார்.

தலாம் மாநில அரசாங்கத்துடன் கூட்டாக பல வீடமைப்புத் திட்டங்களில் தலாம் சம்பந்தப்பட்டிருந்தது. அது நிதி நெருக்கடியில் மூழ்கியதைத் தொடர்ந்து பல திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.

அதனால் அந்தத் திட்டங்கள் முடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக மாநில அரசாங்கம் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தலாம் மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய கடனை ஈடு செய்வதற்காக அதன் 392 மில்லியன் ரிங்கிட் பெறும் சொத்துக்கள் மாநில அரசுக்கு கொடுக்கப்பட்டது.

அந்தக் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதாலும் மாநில அரசாங்கத்தின் தோற்றத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாலும் சிலாங்கூர் மசீச மீது வழக்குத் தொடரும் என்றும் காலித் அறிவித்தார்.

2009ம் ஆண்டு ஜுலை முதல் தேதி பங்குப் பத்திர ஆணையம் அங்கீகரித்த சீரமைப்புத் திட்டத்தை முழுமையாக அமலாக்கியதின் வழி கடனிலிருந்து தான் மீண்டுள்ள வேளையில் அந்தக் குற்றச்சாட்டுக்கள் “குழப்பத்தை” ஏற்படுத்துவதாக தலாம்-மும் சுவா-வின் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளது.