எதிர்மறையான இந்தோனிசிய செய்திகளுக்கு அன்வாரே காரணம் என்கிறார் அகமட் ஸாஹிட்

இந்தோனிசிய ஊடகங்களில் மலேசியாவை பற்றி எதிர்மறையான தகவல்கள் வந்து கொண்டிருப்பதற்கு எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமே காரணம் எனத் தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி கூறிக் கொண்டுள்ளார்.

அந்த பிகேஆர் தலைவருக்கு ஊடகவியலாளர்கள் உட்பட விரிவான தொடர்புகள் இந்தோனிசியாவில் உள்ளதாக அவர் சொன்னார். அதனால் அவர் அத்தகைய செய்திகளை அங்கு பரப்ப முடிகிறது என்றார் அவர்.

“இவ்வளவு காலமும் இந்தோனிசிய ஊடக கருத்துக்கள் அனைத்தும் அன்வாரிடமிருந்து பெறப்பட்டவை.  அவர் மலேசியா மீது எதிர்மறையான செய்திகளை வழங்குகிறார். உண்மையில் மலேசிய நிலவரம் அப்படிப்பட்டதல்ல,” என அவர் நிருபர்களிடம் கூறினார்.

அவர் பாகான் டத்தோவில் கிராமப்புறச் சாலை ஒன்றுக்கான கட்டுமானப் பணியைத் தொடக்கி வைத்த பின்னர் நிருபர்களைச் சந்தித்தார்.

அம்னோ உதவித் தலைவருமான அகமட் ஸாஹிட் அண்மையில் துணைப் பிரதமர் முஹைடின் யாசினுடன் ஜகார்த்தாவுக்குச் சென்று வந்தார்.

அன்வார் இந்தோனிசிய ஊடகங்களிடம் மலேசியாவை பற்றித் தவறான தோற்றத்தைச் சித்தரிக்கக் கூடாது. அவ்வாறு செய்வது இரண்டு நாடுகளுக்கும் இடையில் பதற்றத்தை மூட்டி விடும் என அகமட் ஸாஹிட் குறிப்பிட்டார்.

-பெர்னாமா