கமுந்திங் தடுப்பு மய்யத்தில் விடுதலை கோரி இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டக் கைதிகள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கேலி செய்துள்ள உள்துறை அமைச்சரது நடவடிக்கை பொறுப்பற்றதாகும் என GMI என்ற இசா எதிர்ப்பு இயக்கம் கூறியுள்ளது.
“இதற்கு முன்னதாக உண்ணாவிரதப் போராட்டம் அவர்களுடைய தேர்வு என ஹிஷாமுடின் கூறியிருந்தார்.
அது உண்மையில் பொறுப்பற்ற அறிக்கை ஆகும். காரணம் அவர்களை விடுதலை செய்வதற்குத் தமக்கு அதிகாரம் உள்ளது என்பது அவருக்குத் தெரியும்.”
“அவர் அத்தகைய அறிக்கையை விடுப்பது, உண்ணாவிரதப் போராட்டம் தொடருவதற்கு அனுமதிக்கும் அவருடைய பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது,” என ஜிஎம்ஐ செயலாளர் அகமட் சுக்ரி அப்துல் ரஸாப் கூறினார்.
நேற்றிரவு தமது டிவிட்டர் வாசகர் ஒருவருக்கு வழங்கிய பதிலில் ஆட்டிறைச்சித் துண்டுகள் தமது தேர்வு என்பதைப் போல உண்ணாவிரதம் இசா கைதிகளின் தேர்வு என ஹிஷாமுடின் குறிப்பிட்டிருந்தார்.
தாங்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கோரி கமுந்திங்கில் இரண்டு இசா கைதிகள் இரண்டாம் சுற்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இசா கைதிகளை விடுவிப்பதற்கான அதிகாரமும் பொறுப்பும் உள்துறை அமைச்சருக்கு உள்ளதாக சுவாராம் ஒருங்கிணைப்பாளருமான அகமட் சுக்ரி சொன்னார்.
கடந்த மே மாதம் அந்த தடுப்பு முகாமில் உள்ள பல கைதிகள் தாங்கள் தொடர்ந்து தடுத்து வைத்திருக்கப்படுவதற்கு ஆட்சேபம் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்கள்.
இசா சட்டம் ரத்துச் செய்யப்படும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட போதிலும் அந்த முகாமிலிருந்து கடைசி கைதி 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் தான் வெளியேறுவார்.
இசா சட்டத்துக்குப் பதில் பாதுகாப்புக் குற்றங்கள் சிறப்பு நடவடிக்கைகள் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அது ஜுன் 22ல் அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அது இன்னும் அமலாக்கப்படவில்லை.
“நாங்கள் அது நிகழ்வதற்கு 13வது பொதுத் தேர்தல் வரை காத்திருக்க விரும்பவில்லை. எங்களுக்கு நிச்சயமற்ற சூழ்நிலை வேண்டாம். உள்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.
“அவர்களுக்கு நியாயமான விசாரணையை வழங்குங்கள். நாங்கள் இன்னும் தீவிரமாக செயல்படப் போகிறோம்,” என அகமட் சுக்ரி சொன்னார்.