இந்த மாதம் 14ம் தேதி மலேசியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் 34 நகரங்களிலும் மாநகரங்களிலும் இன்னொரு சுற்று லினாஸ் எதிர்ப்புப் பேரணிகள் ஒரே நேரத்தில் நடத்தப்படும்.
‘மலேசியாவைக் காப்பாற்றுங்கள், லினாஸை நிறுத்துங்கள்’ கூட்டணியின் ‘நடவடிக்கை வேண்டுகோளுக்கு இணங்க அந்தப் பேரணிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றது.
“நாங்கள் தூய்மையான பாதுகாப்பான எதிர்காலத்துக்கு வாக்களிப்போம்” என்னும் கருப் பொருளைக் கொண்ட அந்தப் பேரணிகள் மலேசியாவில் 9 மாநிலங்களிலும் சிட்னி, மெல்பர்ன், பெர்த் ஆகிய ஆஸ்திரேலிய மாநகரங்களிலும் நடைபெறும்..
“தேசியப் பேரணியை அந்தக் கூட்டணி நடத்தும். அதற்கு 30 உள்நாட்டு அமைப்புக்கள் ஆதரவு அளித்துள்ளன. அதில் 15,000 முதல் 20,000 பேர் வரை பங்கு கொள்வர் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
“அது பேரணியாக இருக்கும். எதிர்ப்புக் கூட்டமாக இருக்காது.,” என மலேசியாவைக் காப்பாற்றுங்கள், லினாஸை நிறுத்துங்கள் கூட்டணியின் தலைவர் தான் பூன் தீட் நிருபர்களிடம் கூறினார்.
பாதுகாப்பான தூய்மையான சுற்றுச்சூழலுக்கான மக்களுடைய கோரிக்கையை அந்த நிகழ்வுகள் அரசாங்கத்துக்கு அனுப்பும் என்றும் அப்போது போலி வாக்களிப்பு ஒன்று நடத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.
லினாஸ் மீது வாக்களிப்பதற்காக ஒவ்வொரு பேராளருக்கும் ஒரு வாக்குச் சீட்டுக் கொடுக்கப்படும் அவர்கள் பாகாங் கெபெங்கில் அமையும் லினாஸ் அரிய மண் தொழில் கூடத்துக்கு ஆதரவாக அல்லது எதிராக வாக்களிக்கலாம்.
அடுத்த பொதுத் தேர்தலில் வாக்களிக்க வேண்டியதின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்துவதும் அந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
அந்த நடவடிக்கை அரசாங்க எதிர்ப்பாக கருதப்படக் கூடிய சாத்தியம் பற்றி வினவப்பட்ட போது அரசாங்கத்தை எதிர்ப்பது தமது அமைப்பின் நோக்கமல்ல என்றார் தான்.
லினாஸ் தொழில்கூடத்துக்கு முடிவு கட்டும் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் சொன்னார்.
தங்கள் கோரிக்கைகள் பலன் தராமல் போய் விட்டால் அடுத்த பொதுத் தேர்தலில் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்யக் கூடிய சாத்தியத்தை அந்த கூட்டணி நிராகரிக்கவில்லை.