அன்வார் விலகுவது மனோதத்துவ ‘தந்திரம்’ என அம்னோ வருணனை

அடுத்த பொதுத் தேர்தலில் கூட்டரசு அரசாங்கத்தைக் கைப்பற்ற பக்காத்தான் ராக்யாட் தவறினால் அரசியலிலிருந்து விலகப் போவதாக அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளது, மனோதத்துவ விளையாட்டு என அம்னோ வருணித்துள்ளது.

அந்தத் தகவலை மலாய் நாளேடான சினார் ஹரியான் இன்று வெளியிட்டுள்ளது.

அந்த எதிர்த்தரப்புத் தலைவருடைய அறிக்கை மீது அரசியல் களத்தில் இருபுறமும் உள்ள பலர் கருத்துக் கூறியுள்ளனர்.

பிஎன் சீர்திருத்தங்களுக்கு இணையாக போட்டியிட முடியாததால் அன்வார் “நம்பிக்கை இழந்துள்ளார்” என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முகமட் புவாட் ஸார்க்காஷி கூறினார்.

“இது வெறும் மனோதத்துவ விளையாட்டு. அவரது பாணி நமக்கு நன்கு தெரியும். அவர் அனுதாபத்தை பெறுவதற்காக முறையீடு செய்கிறார்,” என கல்வித் துணை அமைச்சருமான அவர் சொன்னார்.

அன்வார் அரசியலிலிருந்து எளிதாக விலக மாட்டார் என அவர் உறுதியாக நம்புகிறார்.

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற பக்காத்தான் தவறினால் அரசியலிலிருந்து விலகி மீண்டும் கற்பிக்கும் தொழிலுக்கு திரும்புவது பற்றிப் பரிசீலிக்கக் கூடும் என அன்வார் அண்மையில் பிரிட்டனின் பைனான்ஷியல் டைம்ஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

அடுத்த பொதுத் தேர்தலை கடைசிப் போராட்டமாகக் கருதி கடுமையாக உழைப்பதற்கு பக்காத்தான் ஆதரவாளர்களைத் தூண்டுவதே அன்வார் அறிக்கையின் நோக்கம் என அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அகமட் மஸ்லான் கூறியுள்ளார்.

“ஆனால் இந்த நாட்டையும் புத்ராஜெயாவையும் தற்காப்பதற்கு கடுமையாக முயன்று வருவதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். பிஎன் போராட்டம் புனிதமானது,” என்றார் அவர்.

நுருல்: வாரிசுத் திட்டம் எதுமில்லை

இதனிடையே தமது தந்தையுமான அன்வார் தமது அரசியல் வாழ்க்கையிலிருந்து விலகினால் தாம் அடுத்த தலைவராக பொறுப்பேற்கக் கூடும் எனக் கூறப்படுவதை பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் மறுத்துள்ளார்.

போராட்டம் தொடருவதை உறுதி செய்வதற்கு பக்காத்தான் கடுமையாக உழைத்து வருவதால் அந்தப் பிரச்னையே எழவில்லை என்றார் அவர்.

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி காண்பதற்கான பக்காத்தான் முயற்சிகளை வலுப்படுத்தும் வழிகளில் ஒன்றாக அன்வார் அறிக்கை இருக்கக் கூடும் என்றும் நுருல் கருதுகிறார்.

“அந்த மூன்று கட்சிகளையும் இணைப்பதில் வெற்றி கண்ட தலைவர் அன்வார் ஆவார். அவரைப் போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர் ஒருவரை இழக்க பிகேஆர் உறுப்பினர்கள் விரும்ப மாட்டார்கள்,” என அவர் சொன்னதாக சினார் ஹரியான் குறிப்பிட்டுள்ளது.

அன்வாருடைய அறிக்கை துணிச்சலைக் காட்டுகின்றது. அதனை மற்ற அரசியல் தலைவர்களும் பின்பற்ற வேண்டும் என பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் கூறினார்.

“அன்வார் ஒரு கனவான் என்பதை அது காட்டுகின்றது. பக்காத்தானை வழி நடத்தும் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டார். ஆகவே தேர்தலில் வெற்றி பெற அவர் தவறினால் கனவான் ஒருவர் எடுக்கும் சரியான முடிவு அதுவாகத் தான் இருக்கும்,” என்றும் அவர் சொன்னார்.