இந்தோனிசியாவில் அன்வாருக்கு அவ்வளவாக செல்வாக்கு இல்லை என்கிறார் துணைப் பிரதமர்

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமின் பிரச்சாரத்திற்கு இந்தோனிசிய அரசாங்க, அரசியல் தலைவர்கள் எளிதில் மயங்கி விடுவார்கள் என தாம் நம்பவில்லை என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறுகிறார்.

அந்த நாட்டில் அன்வாருடைய செல்வாக்கு கூறப்படுவது போல அவ்வளவு அதிகமாக இல்லை என்றார் அவர்.

மலேசிய அரசியல் சூழ்நிலை குறித்து இந்தோனிசியத் தலைவர்கள் நன்கு அறிந்துள்ளனர். மலேசியாவுடனான நீண்ட கால நல்ல உறவுகளை அவர்கள் அங்கீகரித்துள்ளனர் என முஹைடின் சொன்னார்.

“என்னைப் பொறுத்த வரையில் நிலைமை தமக்கு இந்தோனிசியாவில் அதிகச் செல்வாக்கு இருப்பதாக அன்வார் சித்தரிக்கும் அளவுக்கு இல்லை. நான் அப்படிப் பார்க்கவில்லை. அவர் செய்கின்றது மகத்தான காரியம் என்பதைக் காட்டும் அளவுக்கு அந்த நாட்டு ஊடகங்களில் அவர் பற்றிய செய்திகள் இடம் பெறுவதில்லை,” என பாலியில் மலேசியப் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

இரு வழி உறவுகளை வலுப்படுத்தவும் மக்களுக்கு இடையிலான உறவுகளில் காணப்படும் பிரச்னைகளைத் தீர்க்கவும் முஹைடின் ஆறு நாள் பயணம் மேற்கொண்டு இந்தோனிசியாவுக்குச் சென்றுள்ளார்.

இந்தோனிசிய ஊடகங்களில் மலேசியாவைப் பற்றி எதிர்மறையான செய்திகள் வருவதற்கு அன்வாரே காரணம் என நேற்று தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி சாடியிருந்தார்.
 
இந்தோனிசிய அரசியல் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்துவதற்காக அம்னோ தலைவர்கள் குழு ஒன்றுக்குத் தலைமை ஏற்று அம்னோ துணைத் தலைவருமான முஹைடின் அங்கு சென்றுள்ளார்.

என்றாலும் இந்தோனிசியாவில் அன்வாருக்கு நண்பர்கள் இருப்பதை முஹைடின் நிராகரிக்கவில்லை.

பெர்னாமா