நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவதுபோல் நேர்மையாக செயல்படுவதும் முக்கியமாகும் என்று தலைமை நீதிபதி அரிபின் சக்கரியா கூறினார்.
இன்று கோட்டா பாருவில், உயர் நீதிமன்றம்,முறையீட்டு நீதிமன்றம்,கூட்டரசு நீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதிகள் கூட்டமொன்றைத் தொடக்கிவைத்துப் பேசிய அரிபின்,சுயேச்சை நீதித்துறை நாகரிக சமுதாயத்தின் அடையாளமாகும் என்றார்.
“நீதித்துறை நீதி வழங்குவதில் தேவையற்ற குறுக்கீடுகள் இருக்கக்கூடாது.நீதிபதிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்,சுதந்திரமாகத்தான் செயல்படுகிறார்கள் என்பது தெரியவும் வேண்டும்.
“நீதிபதிகளுக்கு சுதந்திரம் வழங்கப்படுகிறது.அப்போதுதான் அவர்களால் சாட்சியங்களின் அடிப்படையிலும் சட்டத்தின் அடிப்படையிலும் அச்சமின்றியும் பாகுபாடு காட்டாமலும் நீதி வழங்க முடியும்”, என்றாரவர்.
ஆனால், சட்டத்தின் ஆளுமையை நிலைநிறுத்த சுதந்திரம் மட்டும் போதாது, நீதித்துறை நேர்மையாகவும் செயல்பட வேண்டும் என்று அரிபின் குறிப்பிட்டார்.
“இரண்டும் சேர்ந்திருக்க வேண்டும்.நீதிபதிகள் அதிகாரப்பூர்வமாகக் கடமையாற்றும்போது மேற்கொள்ளும் செயல்களுக்கு அவர்களே பொறுப்பு.எடுத்துக்கொண்ட பதவி உறுதிமொழியை எல்லாக் காலத்திலும் காக்க வேண்டும்.திறமையற்ற,தகுதியற்ற, பாரபட்சம் காட்டும் நீதிபதிகள்மீது ஒழுங்குக் கோட்பாட்டின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
“திறமைக்குறைவின் காரணமாக அவர்கள் நீக்கப்படலாம்”, என்றும் தலைமை நீதிபதி எச்சரித்தார்.
நீதிபதிகளின் தீர்ப்பு தரமாக இருத்தல் வேண்டும்
நீதிபதிகள் எழுதும் தீர்ப்புகள் தரமாக இருக்க வேண்டும் என்றாரவர்.
“தீர்ப்புகளுக்கு காரணங்கள் சொல்லப்பட வேண்டும்.உண்மைகளை முறையாக ஆய்ந்து சட்டத்தைச் சரியான முறையில் பயன்படுத்தி வழங்கப்படும் தீர்ப்பு நீதிபதியின் தரத்துக்கும் நீதித்துறையின் தரத்துக்கும் சான்றாகும்.
“சுதந்திரமும் நீதிபதிகளின் திறமையும் நீதித்துறைமீது பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும்”.
அந்த ஐந்து நாள் நீதிபதிகள் கூட்டத்தில் ஒன்பது கூட்டரசு நீதிபதிகள், மலாயா தலைமை நீதிபதி சுல்கிப்ளி அஹமட் மஹினுடின், சாபா, சரவாக் தலைமை நீதிபதி ரிச்சர்ட் மலஞ்சோம், முறையீட்டு நீதிமன்றத் தலைவர் முகம்மட் ராவுஸ் ஷரிப், அரிபின் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
அவர்களுடன் 21 முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள்,65 உயர் நீதிமன்ற நீதிபதிகள், 24 நீதித்துறை ஆணையர்களும் கலந்துகொள்கிறார்கள்.