பொதுத் தேர்தலுக்கான அறிகுறிகள் தென்படுவதால் அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு பல தரப்புக்கள் கோரிக்கை விடுக்கின்றன. இப்போது ஒராங் அஸ்லிக்களும் அந்தத் தரப்புக்களில் இணைந்துள்ளனர்.
தாங்களும் வாக்காளர்களே என்பதை அவர்கள் அரசாங்கத்துக்கு அல்லது எந்த ஒரு அரசியல்வாதிக்கும் நினைவுபடுத்தியுள்ளனர்.
“எங்கள் உரிமைகளை தொடர்ந்து நிராகரித்து வரும் காலத்திற்கு ஒவ்வாத 54 ஆண்டு கால ஆட்சி மீது நாங்கள் வெறுப்படைந்து விட்டோம்,” என தீவகற்ப மலேசியா ஒராங் அஸ்லி கிராமங்கள் கட்டமைப்பை (JKOASM) சேர்ந்த திஜா யோ சுப்பில் கூறினார்.
அவரது அறிக்கை பிஎன்-னைக் குறிக்கிறது என்பது தெளிந்த விஷயமாகும்.
கணிசமான ஒராங் அஸ்லி மக்களைக் கொண்ட ஏழு மலேசிய மாநிலங்களின் கூட்டமைப்பான தீவகற்ப ஒராங் அஸ்லி கட்டமைப்புடன் இணைந்து நட்டத்திய நிருபர்கள் கூட்டத்தில் அவர் பேசினார்.
“இப்போது தொடக்கம் நாங்கள் எங்களுக்கு செவி சாய்க்கும் அரசியல்வாதிகளுக்கும் கட்சிகளுக்கும் மட்டுமே வாக்களிப்போம். எங்கள் உரிமைகளை உறுதி செய்வதற்கு உண்மையாக நடந்து கொள்கின்ற வெளிப்படையான அரசியல்வாதிகளையே நாங்கள் விரும்புகிறோம்”, என்றார் திஜா.
“பிஎன் கட்டுக்குள் உள்ள கூட்டரசு அரசாங்கம் அலட்சியம் செய்து வரும் பல விஷயங்களில் புதிய ஒராங் அஸ்லி நிலக் கொள்கையும் அடங்கும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் இரண்டு துண்டு நிலம் வழங்குவதற்கு ஈடாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள சுதேசி நிலத்தை கையகப்படுத்துவது அந்தக் கொள்கையாகும். ”
“எங்கள் சுதேசி நிலம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நில உரிமைப் பட்டாக்களை அல்ல,” எனக் குறிப்பிட்ட அவர், எங்கள் வாழ்க்கை, பண்பாட்டின் ஒரு பகுதியான பெரும்பரப்பளவைக் கொண்ட சுதேசி ஒராங் அஸ்லி நிலத்திற்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்படும் வீடமைப்பு, விவசாய நிலம் ஈடாக முடியாது.”
“எங்களுக்கு புதிய சுதேசி நிலக் கொள்கை பற்றிய நகல் எங்களுக்குக் காட்டப்படவில்லை. அத்துடன் எங்களுடன் கலந்து கொள்ளவும் இல்லை. சிறிய நிலத்துக்காக அந்த பேரத்தை ஒப்புக் கொள்ளும் எந்த ஒராங் அஸ்லியும் முட்டாளாக இருக்க வேண்டும்,” என்றும் திஜா சொன்னார்.