மஇகா 38 ஆண்டுகளுக்கு முன்பே பொருத்தமற்றதாகி விட்டது என்கிறார் நியாட் தலைவர்

1974ம் ஆண்டு தொடக்கம் அரசியலுக்கும் இந்திய சமூகத்திற்கும் பொருத்தமற்றதாகி விட்டது என நியாட் எனப்படும் தேசிய இந்தியர் உரிமை நடவடிக்கைக் குழு (நியாட்) தலைவர் தஸ்லீம் முகமட் இப்ராஹிம் கூறுகிறார்.

“அது வெகு காலத்துக்கு முன்பே அது பொருத்தமற்றதாக மாறத் தொடங்கி விட்டது. ஆனால் 1979ம் ஆண்டு பதவி ஏற்ற எஸ் சாமிவேலு (முன்னாள் மஇகா தலைவர்) கட்சி இன்னும் காலத்திற்கு ஏற்றது என்னும் தோற்றத்தை ஏற்படுத்த தமது சொந்த வழியைப் பின்பற்றினார்,” என கடந்த வாரம் மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் தஸ்லீம் தெரிவித்தார்.

1979ம் ஆண்டு பொறுப்பேற்ற எஸ் சாமிவேலு மஇகா-வின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தார் என்றும் அதன் விளைவாக 2007ம் ஆண்டு ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமை நடவடிக்கைக் குழு கோலாலம்பூர் சாலைகளில் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் பங்கு கொண்ட பேரணியை நடத்தியது என்றும் கூறும் கருத்துக்களுக்கு மாறாக தஸ்லீம் கூற்று அமைந்துள்ளது.

நீண்ட காலமாக தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கு போராடி வரும் தஸ்லீம், 1974ம் ஆண்டு மஇகா கல்வி மீதான அமைச்சரவைக் குழுவுக்கு மகஜர் ஒன்றை சமர்பித்தது. ஆனால் அதன் யோசனைகள் மீது  எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

“இந்திய மாணவர்கள் தங்களது சமூக பொருளாதார சூழ்நிலைகளினால் பாதிக்கப்படுவதை சமாளிப்பதற்கு” தமிழ்ப் பள்ளிக்கூடங்களையும் அவற்றின் தரத்தையும் உயர்த்துவதற்கும் சிறந்த ஆசிரியர் பயிற்சிகளுக்கும் தங்கும் வசதிகளைக் கொண்ட பள்ளிகளுக்கும் அந்த மகஜர் வேண்டுகோள் விடுத்தது.

“அமைச்சரவைக் குழு அந்த மகஜருக்கு இணக்கம் தெரிவிக்காத போது அப்போதைய மஇகா தலைவர் வி மாணிக்கவாசகம் கூட்டணிக் கட்சியிலிருந்து ஏன் வெளியேறவில்லை ?” என தஸ்லீம் வினவினார்.

அந்த கால கட்டம் சரியான நேரமாகும். ஏனெனில் இந்தியர் ஆதரவைப் பெறுவதற்கு மஇகா-வுக்கு யாரும் போட்டியாக இல்லை எஅன அவர் மேலும் சொன்னார்.

தமது கேள்விக்கு அவரே பதிலும் அளித்தார். மஇகா மௌனம் அனுசரித்து கூட்டணியில் தொடர்ந்து இருந்தது- எல்லாம் தனது தலைமைத்துவம் தொடர்ந்து நிலைத்திருப்பதற்காக- என்றார் அவர்.

“தாங்கள் நன்றாக இருப்பதும் தங்கள் குடும்பங்கள் நன்றாக இருப்பதுமே மிகவும் முக்கியம் என அவர்கள் எண்ணினர்.”

மலேசிய இந்திய சமூகத்துக்காக மஇகா ‘வலியுறுத்தியிருக்க வேண்டிய’ பல வாய்ப்புக்களில் இது மிகவும் பெரியது என்றும் தஸ்லீம் குறிப்பிட்டார்.

மூன்று தசாப்தங்களுக்கு மஇகா உறுப்பினர்

தஸ்லீம், சர்ச்சைக்குரிய இண்டர்லாக் நாவலுக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் ஆவார். அந்த மலாய் இலக்கிய நாவல் கடந்த ஆண்டு பாடத் திட்டத்திலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்டது.

அப்போது நியாட் என்பதற்கு ‘தேசிய இண்டர்லாக் நடவடிக்கைக் குழு’ என அர்த்தமாகும். அரசாங்கம் இண்டர்லாக் புத்தகத்தை மீட்டுக் கொண்ட பின்னர் தேசிய இந்தியர் உரிமை நடவடிக்கைக் குழு என அது தனது பெயரை மாற்றிக் கொண்டது. இந்திய சமூகத்திம் மற்ற கல்விப் பிரச்னைகள் மீது அந்த அமைப்பு தொடர்ந்து போராடுவதற்கு உதவியாக அந்த மாற்றம் செய்யப்பட்டது.

நீண்ட கால மஇகா உறுப்பினர்- 1974ம் ஆண்டு தொடக்கம் 2007ம் ஆண்டு வரை அவர் அந்தக் கட்சியில் இருந்தார். சாமிவேலு தமது சூழ்நிலைகளில் முடிந்ததைச் செய்த தலைவர் என தஸ்லீம் அவருக்கு புகழாரம் சூட்டினார். என்றாலும் அந்த முன்னாள் மஇகா தலைவர் மாபெரும் தவறு செய்து விட்டதாக அவர் சொன்னார்.

“அவர் நல்ல பல காரியங்களைச் செய்தார். அவர் எம்ஐஇடி என்ற மாஜு கல்வி மேம்பாட்டுக் கழகத்தையும் (மஇகா-வின் கல்விக் கரம்) டேப் (தொழில்நுட்ப) கல்லூரியையும் மற்ற பல கல்விக் கூடங்களையும் தொடங்கினார்.”

“நல்ல மனிதர்களை தம்முடன் வைத்துக் கொள்ள விரும்பாததே சாமிவேலு-விடம் இருந்த ஒரே பிரச்னை. அவரைச் சுற்றியிருந்த அனைத்து அறிவாளிகள்- நீங்கள் ஆமாம் மனிதர்களாக இல்லாவிட்டால்- நீங்கள் நிலைத்திருக்க முடியாது !” என்றார் தஸ்லீம்.

முன்னாள் பொதுப் பணி அமைச்சரான சாமிவேலு நல்ல ஆலோசகர்களை வைத்திருக்காததால் தான் 2010ம் ஆண்டு பதவியிலிருந்து விலக நேரிட்டது என அவர் கருதுகிறார்.

நடப்பு மஇகா தலைமைத்துவம் பற்றியும் தஸ்லீமிடம் வினவப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர் ” ஜி பழனிவே நல்ல மனிதர்- அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவர் திறமையான தலைவர் என நான் எண்ணவில்லை,” என்றார்.

எந்த ஒரு பிஎன் தலைவரும் தாம் பிரதிநிதிப்பதாகக் கூறிக் கொள்ளும் சமூகத்தைப் பற்றி உண்மையிலேயே கவலைப்படுவதில்லை என நெருக்கப்பட்ட போது தஸ்லீம் கூறினார்.

இந்திய சமூகத்தில் ஹிண்டராப்-பின் இடம் குறித்துக் கேட்கப்பட்ட போது அந்த இயக்கம் பக்காத்தான் ராக்யாட்டுக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.

2007ம் ஆண்டு பெரிய அளவில் பேரணியை நடத்திய பின்னர் அந்த இயக்கம், பிஎன் ஆதரவு மலேசிய மக்கள் சக்திக் கட்சி (MMSP) பிஎன் எதிர்ப்பு மனித உரிமைக் கட்சி போன்ற பல பிரிவுகளாக சிதறியிருக்கிறது.

ஏழ்மையில் உள்ள இந்தியர்களுடைய தேவைகளைக் கவனிக்க பக்காத்தான் தவறி விட்டதாகக் குறிப்பிட்டுள்ள ஹிண்டராப் மூத்த தலைவர் பி உதயகுமார், பல தொகுதிகளில் போட்டியிட எண்ணியுள்ளதாகவும் அறிவித்துள்ளார். அதனால் வரும் பொதுத் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்படக் கூடும்.

என்றாலும் ஹிண்ட்ராப் உதயகுமார் அறிக்கையிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு அது அவருடைய ‘தனிப்பட்ட கருத்து’ எனத் தெரிவித்துள்ளது.

‘நான் ஹிண்ட்ராப்பின் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்’

தஸ்லீம் சொன்னார்: ஹிண்ட்ராப்பில் உள்ள என் நண்பர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் இது தான். “நான் உங்களுடைய துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் அனுபவித்த எல்லா சிரமங்களையும் நான் பகிர்ந்து கொள்கிறேன்.”

“பக்காத்தான் சொல்வது போல- அது இப்போது புத்ராஜெயாவுக்குச் செல்லுமானால் முழுச் சூழலும் வேறு விதமாக இருக்கும்.”

“அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் சமூகத்தை பெரிதாகப் பாதிக்கப் போவதில்லை. நாம் 55 ஆண்டுகளை ஏற்கனவே அதனை கடந்து விட்டோம். இந்தியர் பிரச்னைகளை பிஎன் உண்மையாகக் கவனிக்கும் என்ற நம்பிக்கை இப்போது எனக்கு இல்லை.”

2008ம் ஆண்டு அரசியல் சுனாமி என பின்னர் அழைக்கப்பட்டதற்கு தூண்டுகோலாகத் திகழ்ந்த பெருமை ஹிண்ட்ராப்-க்கு போய் சேர வேண்டும் என்றும் தஸ்லீம் சொன்னார்.

“நிச்சயமான சீன வாக்காளர்கள் முக்கியமானவர்களே. மலாய் சமூகத்திலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.”

“ஆனால் என்னைப் பொறுத்த வரையில் ஹிண்ட்ராப் மிக, மிக முக்கியமான பங்கை ஆற்றியது. காரணம் ஒவ்வொருவரும் ‘மக்கள் சக்தி’ என்ற சொற்களைப் பயன்படுத்தி பிரச்சாரம் செய்தார்கள். பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் முதல் பக்காத்தான் வழியாக டிஏபி, பிகேஆர் உட்பட ஏன் பாஸ் கூட ‘மக்கள் சக்தி’ எனச் சொல்லத் தொடங்கின. அது அடிப்படையில் ஹிண்ட்ராப் சொற்களாகும்,” என்றார் தஸ்லீம்.

என்றாலும் அந்தப் பேரணி இந்திய முஸ்லிம் பிரச்னைகளுக்கும் போராடியிருந்தால் அது இன்னும் பெரிய வெற்றியாக அமைந்திருக்கும் என அவர் கருதுகிறார்.

“நீங்கள் ஏன் அதனை ‘இந்து உரிமைகள்’ எனச் சொல்ல வேண்டும் ? அதனை ஏன் ‘இந்தியர் உரிமைகள்’ எனக் கூறக் கூடாது. அப்போது என்னைப் போன்றவர்கள்… இந்திய முஸ்லிம்களுக்கும் பிரச்னைகள் உண்டு என நான் சொல்கிறேன் !”

இந்திய முஸ்லிம்கள் ‘அமைதியாக’ அந்தப் பேரணியில் கலந்து கொண்டதாக அவர் மேலும் கூறினார். அவர்கள் சொங்கோக் அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியும்.

என்றாலும் அந்தப் பேரணி இந்துப் பிரச்னைகளுக்குள் மட்டும் கட்டுப்படுத்தப்படாமல் இருந்ததல் இன்னும் அதிகமான இந்திய முஸ்லிம்கள் அதில் பங்கு கொண்டிருப்பர் என தஸ்லீம் குறிப்பிட்டார்.

TAGS: