கோலா சிலாங்கூர் முஸ்லிம்கள் ஜோடியாக அமர்ந்து சினிமா பார்க்கத் தடை

கோலா சிலாங்கூர் திரை அரங்குகளில்  திருமணம் ஆகாத முஸ்லிம் ஜோடிகள் தனித்தனியே அமர்ந்துதான் படம் பார்க்க வேண்டும் என்ற புதிய விதியொன்றை ஊராட்சி மன்றத்தின் பாஸ் கவுன்சிலர்கள் கொண்டு வந்துள்ளனர்.

இந்தப் புதிய விதியை நினைவுறுத்தும் அறிவிப்புகள் திரை அரங்கில் வைக்கப்பட வேண்டும் என்று கோலா  சிலாங்கூர் மாவட்ட மன்றம் கூறியுள்ளது.

ஒரு திரை அரங்கு அதன் உரிமத்தைப் புதுப்பிக்கச் சென்றபோது இப்புதிய விதிமுறை நிபந்தனைகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டிருந்தது என சைனா பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏப்ரலில் மாவட்ட மன்றத்திடமிருந்து ஒரு கடிதம் வந்ததாகவும் அது உரிமம் புதுப்பிக்கப்பட்டதைத் தெரிவித்ததுடன் திரை அரங்கில் முன்சொல்லப்பட்ட அறிவிப்புகளை வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்ததாகவும்  தெரிகிறது என்று அச்சீனமொழி நாளேடு கூறியது.

அந்தத் திரை அரங்கும் மலாய்மொழி அறிவிப்பு ஒன்றை வைத்துள்ளது.அது, “கவனம்: திருமணம் ஆகாத முஸ்லிம் ஜோடிகள் ஒருவரின் பக்கத்தில் மற்றவர் அமரக் கூடாது(Bagi orang Islam yang bukan Muhrim dilarang duduk bersebelahan)”,என்று குறிப்பிட்டது.

அங்கு படம் பார்க்கச் செல்வோரில் பெரும்பாலோர் மலாய்க்காரர்கள் என்பதால் பாஸ் கவுன்சிலர்கள் அப்படி ஓர் அறிவிப்பை வைக்குமாறு கோரிக்கை விடுத்ததாக கோலா சிலாங்கூர் கவுன்சிலர் பி.திருமூர்த்தி சைனா பிரஸ் செய்தித்தாளிடம் கூறினார்.

அது ஒரு கொள்கை அல்ல என்று கூறிய அவர், முஸ்லிம்களுக்கு அது ஒரு நினைவுறுத்தல், அவ்வளவுதான் என்றார்.

லாட்டரி கடைகளில் முஸ்லிம்கள் லாட்டரி சீட்டு வாங்கக்கூடாது என்று நினைவுறுத்த வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் போன்றதுதான் அது.அது, முஸ்லிம்-அல்லாதாரைக் கட்டுப்படுத்தாது என்றாரவர்.